12 ஜூன் 2010

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.-ஜெயலலிதா.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், இதற்கு விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவமே உதாரணமாக உள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும்; அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும்; தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.
இதற்கேற்றாற் போல், இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
இந்த பயங்கர குண்டு வெடிப்பால் நான்கு அடி தூரத்திற்கு தண்டவாளம் தகர்க்கப்பட்டு, தண்டவாளத்தின் நடுவே 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைக்கோட்டை ரயில் இந்தப் பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு இந்த குண்டு வெடித்ததன் காரணமாக, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சதி வேலை காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பெருத்த அவதிக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.
கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவலர்களின் எண்ணிக்கை குறைந்து தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனது ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல்துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது.
போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் இவை தான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக