21 ஜூன் 2010
குழந்தைகளை ஒப்படைக்க மறுத்து வளர்ப்பு பெற்றோர் கதறல்!
கடத்திச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட குழந்தைகளை ஒப்படைக்க மறுத்த வளர்ப்பு பெற்றோர், கண்ணீர் விட்டனர். குழந்தைகளை தங்களுக்கே கொடுத்து விடும்படி உண்மையான பெற்றோரின் காலைப்பிடித்து அவர்கள் கதறி அழுதது உள்ளத்தை நெகிழவைப்பதாக இருந்தது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிருஷ்ணகிரி குழந்தை கடத்தல் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 2 ஆண் குழந்தைகளை கிருஷ்ணகிரியை சேர்ந்த தனலட்சுமியும், அவரது கள்ளக்காதலனான ராமலிங்கமும் சேர்ந்து தூக்கி வந்துள்ளனர். அவர்களில் 3 வயது குழந்தை பாலாஜி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது தாயாருடன் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கடத்தப்பட்டான். மற்றொரு குழந்தை, நிசார் என்பவரின் மனைவிக்கு பிரசவம் நடந்து 4 நாளில் கடத்தப்பட்டது. 2 குழந்தைகளையும் அவர்கள் சென்னைக்கு கொண்டு சென்று கிரிஜா மூலம் கைக்குழந்தையை பெங்களூரை சேர்ந்த குளுதியராஜ்-மேகலா தம்பதியினருக்கு ரூ.55 ஆயிரத்திற்கு விற்றனர். 3 வயது பாலாஜியை கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த செல்வி என்பவரிடம் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்றுள்ளனர். இவர்கள் மூலம் இந்த குழந்தை, கிருஷ்ணகிரியை சேர்ந்த பெரியசாமி-கமலம் தம்பதியினருக்கு கிடைத்தது. பேராம்பட்டு காலனியை சேர்ந்த செல்வத்தின் 3 வயது ஆண் குழந்தையான பாலாஜி கடந்த 11/2 வருடங்களாக குழந்தை இல்லாத பெரியசாமி-கமலம் தம்பதியினர் வளர்த்து வருகின்றனர். நிசாரின் ஆண் குழந்தையை பெங்களூரை சேர்ந்த குளுதியராஜ் வளர்த்து வருகிறார். போலீஸ் காவலின் போது தனலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் 2 குழந்தைகளையும் மீட்க சென்றனர். போலீசார் சென்றதும் அதிர்ச்சியடைந்த வளர்ப்பு பெற்றோர் குழந்தையை கட்டிப் பிடித்து அழ தொடங்கினார்கள். போலீசார் ஒருவாறாக சமாதானம் செய்து அவர்களை கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். உடனே உண்மையான பெற்றோர் பாசத்துடன் சென்று குழந்தையை கட்டி அணைத்து முத்தமிட்டனர். ஆனால் குழந்தைகளுக்கு அவர்களை அடையாளம் தெரியாததால் அலறி சத்தம் போட்டபடி வளர்ப்பு பெற்றோரிடம் ஓடினார்கள். இதைப்பார்த்த உண்மையான பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளை கோர்ட்டில் ஒப்படைத்து உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கினார்கள். அப்போது வளர்ப்பு பெற்றோர், குழந்தைகளை மிகவும் பாசமாக வளர்த்து வருவதால் எங்களால் அவர்களை பிரிய முடியாது என குழந்தைகளை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர். இதைப் பார்த்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர்கள், குழந்தைகளை பிரிந்து 2 ஆண்டாக நாங்கள் படும் கஷ்டத்திற்கு இப்போதுதான் விடிவு ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தையை எங்களால் விட்டுத் தர முடியாது என அவர்களும் கண்ணீர்மல்க தெரிவித்தனர். உடனே வளர்ப்பு பெற்றோர் குழந்தையை கட்டி அணைத்தும், நிஜபெற்றோரின் காலில் விழுந்தும் கதறி அழத் தொடங்கினார். இந்த உருக்கமான காட்சி, காண்போர் நெஞ்சை நெகிழவைப்பதாக இருந்தது. ஆனால் இந்த பாசப்போராட்டம் பற்றி எதுவும் தெரியாத குழந்தைகள் இருவரும் போலீஸ் நிலையத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததுதான் பெரும் சோகம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக