07 ஜூன் 2010

சரத்திற்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.


கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவினால் விடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிக்கு கொண்டு வருவதற்கு, ஆக்ரோசமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொண்டிருந்தார்.
யுத்த காலக்கட்டங்களில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் கைக்கோர்த்து செயற்பட்ட போதும், பதவியை துறந்து அரசியலில் இறங்கிய பின்னர், அரசாங்கத்தின் எதிரியாக பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் பல்வேறு வகைகளிலும் சரத் பொன்சேகாவை புறக்கணித்து வந்தமையை மேற்கோள் காட்டி, த கார்டியன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்த வேளையில், ஊடககங்களுக்கு பதில் வழங்கும் போது, யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களை தாம் ஒரு போதும் மறைக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, பிபிசியின் ஹார்ட் டோக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம், சரத் பொன்சேகாவின் கருத்து குறித்து வினவப்பட்டது.
இதற்கு ஆக்ரோசமான பதிலை வெளியிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஸ, அவ்வாறு சரத் பொன்சேகா செய்வாரானால், அவரை நாங்கள் தூக்கில் இடுவோம் எனவும், அவர் ஒரு பொய்காரர் எனவும், அவருக்கு அந்த உரிமை இல்லை எனவும் கடும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர், சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது, சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கொலை செய்யுமாறு உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டதாக கூறியிருந்தார்.
இதன் பின்னரே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு இராணுவ சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த கைது, தடுத்து வைப்பு மற்றும் கால தாமதங்களின் பின்னணியில், அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக த கார்டியன் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக