இலங்கைத் தமிழ்ப் பெண்ணான மாயா அருள்பிரகாசம், பாப் இசை உலகில் முன்னணிப் பாடகராகத் திகழ்கிறார். இவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல முறை கூறிய கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. தற்போது வெளியான அல்பமான 'Born Free' இதேபோல சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.இந்த மாத ஆரம்பத்தில் வெளியான MIA இன் 'Born Free' வீடியோவை சில இணையங்கள் நிராகரித்தமை தெரிந்ததே. அந்த வீடியோவில் வெளிப்படையான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், பாடகி அந்த வீடியோ முழுதும் நெருக்கடி நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்துத் தனது கருத்தை வெளியிட்டுள்ள MIA, அதில் காண்பிக்கப்பட்டது போலியான இரத்தம் மற்றும் ஒரு நடிப்பு. ஆனால் மக்கள் உண்மையான படுகொலை வீடியோக்களைவிட இதற்குக் கோபப்படுகிறார்கள் என தி கார்டியன் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவைக் கருத்தில் கொண்டே MIA இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேற்படி படுகொலை வீடியோ குறித்து தாம் ஆறு மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் எழுதியும் கூட அதைப் பற்றி ஒருவருமே பேசவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், எனவேதான் தாமும் ரோமெய்னும் சேர்ந்து ஒரு வீடியோவை உருவாக்கியதாகவும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார்.மேலும், இலங்கைப் போர் நிறைவடைந்து சில மாதங்களின் பின்னர், இலங்கைக் கடற்கரையை உலகின் மிகச்சிறந்த உல்லாசப் பயண இடமாக தி நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இதற்கு எதிராகவும் MIA குரல்கொடுத்தது தெரிந்ததே. இலங்கைக் கடற்கரையில் 3 லட்சம் மக்கள் குண்டுபோட்டு கொல்லப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் அக்கடற்கரையை உலகின் முதற்தர இடமென குறிப்பிட்ட போது... உல்லாசப்பயணத்துறை அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும்" என அவர் வாதாடுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக