கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் நேற்று இரவு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், விருது நிகழ்வுக்கு வந்திருந்த ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவும் சிறிது நேரத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று காலை ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார நிகழ்விலும் நடிகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பாதுகாப்பின் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றைய விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என காரணம் கூறப்பட்டது. எனினும் இது சமாளிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் பல அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக பல முன்னணி இந்திய நடிகர்கள் இந்த விருது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இதனையும் மீறி கலந்து கொண்ட நடிகர்களை இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவதை தவிர்க்கும் பொருட்டே ஹிந்தி திரையுலகத்தினர் ஜனாதிபதியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற ஹிந்தி நடிகர்களுக்கான விருந்து உபசாரத்துக்கு ஹிந்தி நடிகர்கள் பங்கு பற்றாமையினாலேயே ஜனாதிபதியும் இறுதி விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக