05 ஜூன் 2010

ஜெனிலியா சொல்வது உண்மையா பொய்யா?



நீரோ மன்னனின் வம்சாவளியோ என்ன இழவோ? பத்திகிட்டு எரியுது பிரச்சனை, பல்லை காட்டி ஆட்டம் போட போயிருக்கிறார்கள் கொழும்புக்கு! மும்பை நட்சத்திரங்கள் சிலரை வைத்து இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்திக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இதில் கலந்து கொள்ள ஜெனிலியாவும் போயிருக்கிறார் என்றொரு செய்தி. கேள்விப்பட்டவுடன் ஆடிப் போய் விட்டது தமிழ் படவுலகம். இந்தியில் அறிமுகம் ஆனாலும், தமிழ் படமான 'பாய்ஸ்' தான் புறவுலகுக்கு தெரிய வைத்தது ஜெனிலியாவை. இத்தனைக்கும் தமிழில் 'உத்தமபுத்திரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர்.

உடனடியாக நடிகர் சங்கத்திடம் முறையிட்ட தயாரிப்பாளர் சங்கம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. வெகுண்டு எழுந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவி 'இனிமேல் ஜெனிலியா நடிக்கும் எந்த படத்திற்கும் தொழில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை' என்று ஓப்பனாக அறிக்கை வெளியிட்டார். பெப்சி அமைப்பும் இதே நிலையை எடுத்தது. விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கப் போகிறார் ஜெனிலியா. உடனடியாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமும் இதுகுறித்து பேசப்பட்டது. 'தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போன ஜெனிலியாவை படத்திலிருந்தே நீக்கிவிடுகிறேன்' என்று அவரும் முடிவெடுக்க, இத்தனை தகவல்களும் மின்னல் வேகத்தில் போய் சேர்ந்தது ஜெனிலியாவுக்கு.
'நான் இலங்கைக்கு போகவே இல்லை. தமிழர்களின் உணர்வை மதிக்கிறேன். நான் இலங்கைக்கு போனதாக வந்த செய்தியில் உண்மை இல்லை' என்று மறுத்திருக்கிறார். ஆனால் உண்மை அது இல்லை. நிலைமை விபரீதமாக போவதை சற்று தாமதமாக புரிந்து கொண்டவர் இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரைப்பட முக்கியஸ்தர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக