10 ஜூன் 2010

தமிழர்களின் தலைவனாக தன்னை பிரகடனப்படுத்த துடிக்கும் கருணாநிதியின் முயற்சிக்கு பேராசிரியர் சிவத்தம்பி துணை போவதா?


தமிழரது வாழ்வும் தமிழ் மொழியும் குருதியில் தோய்ந்துள்ள நிலையில் செமமொழி மாநாடு தேவையா என முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவிற்கு என விளிக்கப்பட்ட இந்த அறிக்கையின் முழு விபரமும் வருமாறு:
எமது மதிப்பிற்குரிய பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவிற்கு.......
ஐயா! இலங்கைத் தமிழர்களாகிய நாம் தற்சமயம் 50,000 ற்கும் அதிகமான எம் உறவுகளை கொடூரமாகப் பலி கொடுத்து, பல ஆயிரக்கணக்கானவர்களை அங்கவீனர்களாக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை விதவைகளாக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை அனாதைகளாக்கி, உண்ண உணவிண்றி, உடுக்க உடையின்றி, இருக்க வீடின்றி, உறவுகள் பலரை சிறையில் பறிகொடுத்து அகதிகளாகி, ஏதிலிகளாகி வாழ்வதற்கே திராணி அற்றவர்களாக, தெருக்களிலும், பற்றைகளிலும், முகாம்களிலும் உரிமையற்றவர்களாக முடக்கப்பட்டுள்ளோம்.
எங்கள் தமிழ் மொழி எமது குருதியில் தோய்ந்து செம்மொழியாக குற்றுயிராய் துடித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு விழா எடுப்பதற்காக (செத்த வீடு) கருணாநிதி ஜுன் 23 க்கு உங்களையும் அழைப்பதாகவும் தெரிய வருகிறது.
இலங்கைத் தமிழர் சார்பாக நீங்கள் கலந்து எமது உறவுகளின் குருதியில் குளித்த செம்மொழி மாநாட்டு இறுதி ஊர்வலத்தில் (இலங்கைத் தமிழர்களுக்கன செத்த வீட்டில்)கலந்து கொள்ள வேண்டாம் என மிகவும் தாழ்மையுடன் வேண்டுவதோடு, தற்போதைய மாணவர் ஒன்றியத்தினர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் இது சார்பாகக் கவனத்தில் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
எமது இப்போதைய இந்த அவலநிலைக்குக் காரணம் கருணாநிதி அவர்களே. அவர் இப்போது இந்த விழா எடுப்பதற்கான காரணம் என்ன? தான் தான் தமிழர் தலைவன் என்று தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ளவா? தான் தலைவனாவதற்கு சந்தர்ப்பம் பார்த்து நேர்த்தியாக எங்களைக் கொண்டு தனக்குப் பட்டம் சூட்டி தான் தமிழர் தலைவனாகப் பார்க்கின்றார். இவர் இந்தப் பட்டம் தனக்கு வரவேண்டும என்பதற்காகவே எங்கள் குருதியில் தமிழைத் தோய்த்து செம்மொழியாக்கினார்.
உலகத் தமிழர்களின் ஒரே தலைவன் எமது தேசியத் தலைவர் மேதகு திரு.வே.பிரபாகரன் அவர்களே! அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதை இலங்கைத் தமிழர் நாம் மெய்ப்பிப்போம். நாம் யாரும் அதில் பங்கு கொள்ளாதிருப்போம்....
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக