07 ஜூன் 2010

அரசாங்கம் ஐபாவை காட்டி சீபாவில் கையெழுத்திடப்போகிறது.


அரசாங்கம் நாட்டு மக்களுக்கு "ஐஃபாவை' காட்டி, நாட்டுக்குப் பாதகமான "சீபா' உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகிறன்றது. அரசின் இத்தகைய செயல் ""தங்கையைக் காட்டி அக்காவைத் திருமணம் செய்து வைப்பது'' போன்றதாகும் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். "சீபா' என்பது என்னவென தனக்கே தெரியாதென்கிறார் ஜனாதிபதி.எனவே அதில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகளை பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். கொழும்பு 7 இலுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2003 ஆம் ஆண்டு "சீபா' (பரந்தளவிலான பொருளாதார நல்லிணக்க) உடன்படிக்கை தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு நகல் வடிவம் பெற்று இலங்கையில் இடம்பெற்ற சார்க் மாநாட்டின் போது இதில் அரசாங்கம் கைச்சாத்திடவிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைப்புக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் கையெழுத்திடுவது கைவிடப்பட்டது. தற்போது சீபாவில் கையெழுத்திட வேண்டுமென இந்திய தரப்பிலிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இதில் நிச்சயம் கையெழுத்திடும். எனவே அதற்கு முன்பு பாராளுமன்றத்திடமும் அமைச்சரவைக்கும் முன் வைக்கப்படாத உடன்படிக்கை விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். சீபாவில் என்ன இருக்கின்றதென தனக்கே தெரியாதென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது நகைப்புக்குரிய விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் சீபா தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும். ஏனெனில் இதேபோன்று இந்தியாவுடன் "சப்டா' உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாக எதுவும் ஏற்படவில்லை. நாம் 100 வீதமான ஏற்றுமதியை மேற்கொண்டோம். ஆனால் இந்தியா 500 வீத ஏற்றுமதியை எமது நாட்டுக்குள் மேற்கொண்டது. இதனை விட பயங்கரமான உடன்படிக்கையே சீபாவாகும். இதனால் இலங்கையின் உற்பத்தியாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். இந்தியாவின் விசாலமான உற்பத்திகள் இங்கு ஆரம்பிக்கப்படும். இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் பாதிப்படைவார்கள். அத்தோடு இந்தியாவிலிருந்து வைத்தியர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், கணினி நிபுணர்களென, ஊழியர்களுக்கும் இங்கு வந்து தொழில்புரிய கதவுகள் திறக்கப்படுகின்றன. இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் தொழில்களை இழப்பார்கள். மொத்தத்தில் எமது நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எனவே இதனை பாராளுமன்றத்தில் முன் வைத்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து ஷல்மான்கானையும், ஐஸ்வர்யாராயையும் காண்பித்து மக்களை மோக வலையில் சிக்க வைத்து அரசாங்கம் சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக