சிட்லபாக்கத்தில் புரோகிதர் கொலை வழக்கில் துப்பு துலங்கியது. இது தொடர்பாக கைதான பள்ளி மாணவர், "வீட்டு வேலைக்கு வந்த தாயிடம் தவறாக நடக்க முயன்றதால் முதியவரை கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் ராதாநகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி மாலை வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின்பேரில், பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜ× தலைமையில் உதவி கமிஷனர் முத்தமிழ்மணி, இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஆல்வின்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. தண்டபாணி பெண்கள் விஷயத்தில் சபலம் கொண்டு செயல்படுவார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி கடந்த 8 மாதங்களுக்கு முன் உடலநலக் குறைவினால் இறந்து விட்டார். தண்டபாணி கோவிலில் புரோகிதர் வேலை பார்த்து வந்தார். அவரது சொந்த ஊர் பெங்களூர். கடந்த 4 மாதங்களாக அவருடைய வீட்டில் ஒரு பெண் வேலை பார்த்து வந்தார். விசாரணையில், அவர் சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மனைவி முத்துலட்சுமி (52) என்பது தெரிய வந்தது. மேடவாக்கத்தில் வாகன சோதனை நடத்திக் கொண்டு இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துலட்சுமியின் மகன் வெங்கட் என்ற வெங்கட சுப்பிரமணியம் (18) என்பவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்தான் புரோகிதரை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:- நான் பிளஸ்-2 படித்துள்ளேன். தேர்வில் 678 மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளேன். கடந்த ஜனவரி மாதம் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்ததை கண்டு நானும் எனது அம்மா முத்துலட்சுமியும் தண்டபாணி வீட்டுக்கு சென்றோம். அவர் எனது அம்மாவை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார். வாரிசு இல்லாததால் சுவீகாரம் செய்துக் கொள்வதாகவும் என்னிடம் கூறினார். பின்னர் நான் பிளஸ்-2 தேர்வுக்காக படித்ததால் அம்மாவுடன் செல்லவில்லை. தண்டபாணி தவறான முறையில் நடக்க முயற்சித்து பல்வேறு தொல்லைகள் தருவதாக அம்மா என்னிடம் கூறினார். இதற்கிடையில் வேலைக்கு சரியாக செல்வில்லை என்றதும் அம்மாவுக்கு போன்செய்து மிரட்டி இருக்கிறார். இந்த செய்தி எனக்கு தெரிய வந்தது. இதை என் நண்பர் அப்துல் சுபான் (20) என்பவரிடம் கூறினேன். ஆடு வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு தண்டபாணி வீட்டிற்கு சென்றோம். அம்மாவிடம் தவறாக நடந்ததை பற்றி தண்டபாணியிடம் கேட்டோம். இதில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் தண்டபாணியை கீழே தள்ளி விட்டேன். கீழே விழுந்ததும் தண்டபாணியின் கழுத்தை சுபான் வெட்டினார். நான் வயிற்றில் குத்தினேன். பின்னர் பீரோவில் இருந்த 2 மோதிரம், 2 வளையல், 1 சங்கிலி, ரூ.55 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டோம். இவ்வாறு வெங்கட் கூறினார். இதைத்தொடர்ந்து 4 பவுன் தங்க நகைகள், ரூ 55 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றினார்கள். இதையொட்டி வெங்கட், சுபான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த 2 நாளில் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக