05 ஜூன் 2010

இனவெறியன் ராஜபக்ஷவின் இந்திய வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!-திருமாவளவன்.


இனவெறியன் ராஜபக்சே புதுதில்லி வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறியன் ராஜபக்சே எதிர்வரும் 8Š.6.Š2010 அன்று இந்திய ஆட்சியாளர்களைச் சந்திப்பதற்காக புதுதில்லி வருவதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த மனிதநேயமில்லாத காட்டுமிராண்டி ராஜபக்சே, அந்தப் பேரவலம் நடந்து முடிந்து ஓராண்டு ஆன நிலையிலும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அச்சிக்கலுக்கான அரசியல் தீர்வை உருவாக்கவோ சிறிதும் முனைப்புக் காட்டவில்லை. கடந்த ஜனவரி மாதத்திற்குள்ளாக வவுனியாவில் உள்ள வதைமுகாம்களிளுள்ள அனைவரையும் விடுவித்து அவரவருக்கான சொந்த வாழிடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப் போவதாகவும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவேற்றப் போவதாகவும் இந்திய அரசுக்கு வாக்குறுதி அளித்த ராஜபக்சே அவற்றை நிறைவேற்றுவதற்கு எள்முனையளவும் அக்கறை காட்டவில்லை. இன்னும் இலட்சக்கணக்கானோர் வவுனியா வதைமுகாம்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் ஏதும் செய்யப்படாத நிலையில் அனாதைகளாய் அல்லாடி வருகின்றனர். இத்தகைய நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடித் தப்பித்துச் சென்ற தமிழர்களையும் கடல் பகுதிகளில் சுற்றி வளைத்துத் தாக்குகின்ற கொடுமைகளையும் சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இந்தியாவுக்கோ அல்லது சர்வதேசச் சமூகத்திற்கோ
அச்சப்படாமல், மனிதநேய மரபுகளையும் மதிக்காமல் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்கிற ஈவிரக்கமில்லாத இனவெறியன் இராஜபக்சேவின் இந்திய வருகை மேலும் ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே இராஜபக்சேவின் வருகையை எதிர்க்கும் வகையிலும் சிங்கள அரசின் மனிதநேயமற்ற போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் 8.6.Š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் சென்னையில் எனது தலைமையில் நடைபெறுகிறது. அந்த அறப்போராட்டத்தில் மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக