30 ஏப்ரல் 2012
29 ஏப்ரல் 2012
ஈழம் மலர மாநாடு கூட்டுகிறார் கருணாநிதி!
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் தலைமையில் தனி ஈழ
மாநாடு நாளை சென்னையில் ஆரம்பமாகின்றது.
தமிழ் ஈழ ஒன்றினைந்த அமைப்பு என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டு கருணாநிதியினால்
அமைக்கப்பட்ட அமைப்பே இவ்வாறு நாளை கூடவுள்ளது. சென்னை அறிவாளயத்தில் அமைந்துள்ள
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையகத்தில் இந்த ஒன்று கூடல்
இடம்பெறவுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் அம்பாசகம், கே வீரமணி, முன்னாள்
அமைச்சர் ஜெகதீஸ்வரன், தமிழர் பேரவையின் தலைவர் கே வீரபாண்டி ஆகிய தனி
ஈழகொள்ளையாளர்கள் இதில் பங்குகொள்ளவுள்ளனர்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமையப்பெற வேண்டும் என்று முத்துவேல் கருணாநிதி கடந்த
தினத்தில் அறிவித்தல் விடுத்திருந்த நிலையிலேயே நாளைய தினம் இந்த ஒன்று கூடல்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனி
ஈழம் அமைய அனைவரும் சாத்வீக போராட்டம் மோற்கொள்ளவேண்டும் என்று
குறிப்பிட்டிருந்தார்.
அதற்காக மகாத்மா காத்தி, அன்னை தெரேசா அதுபோல் இலங்கையில் இருந்த தமிழ்
தலைவரான தந்தை செல்வா ஆகியோரின் கொள்கையை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை
விடுத்திருந்தார்.
யுத்தம் ஒரு தற்காலிக பின்னடைவே என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள
தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் தற்போது ஈழம்
மலர்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேறுகிறார் பிரசன்ன சில்வா!

இவரது இடத்துக்கு யாரை நியமிப்பது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வரும் காலத்தில் வேறு எங்காவது இராஜதந்திரப் பதவி ஏதும் வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இவரது பணிக்காலம் முடிவடைந்த நிலையிலேயே சிறிலங்காவுக்குத் திரும்புவதாகவும் சரத் திசநாயக்க கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவத்தின் 59வது டிவிசனுக்குத் தலைதாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா போர்க்குற்றவாளி என்றும் அவருக்கான இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தது.
அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தப்பிச் செல்ல இடமளிக்கக் கூடாது என்று குரல் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
28 ஏப்ரல் 2012
கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டது உண்மை-மருத்துவர் சாட்சியம்!

சிறிலங்காவில் போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போரின் இறுதிகட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடிபொருள் நிபுணர் அலன் போஸ்டனின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.
இதனை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ள நிலையிலேயே, கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்டவரை நேரில் கண்டவரின் சாட்சியத்தை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மருத்துவப் பணியாளர் மேலும் கூறியுள்ளதாவது -
“போரின் இறுதி மாதங்களில் வெடிக்காத கிளஸ்டர் குண்டு ஒன்றினால் காயமடைந்த ஒருவரைப் பார்த்தேன்.
அவரது காலைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அந்த கிளஸ்டர் குண்டின் பாகம், வெடிக்காத நிலையில் புதைந்து போயிருந்தது.
பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைச் சுற்றாடலில் தாம் கிளஸ்டர் குண்டின் சிதறல்களைக் கண்டுபிடித்ததாக ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்கள் கிளஸ்டர் குண்டுகளால் காயமடைந்ததாக கூறியதை அடுத்து அந்த மருத்துவமனை புதுமாத்தளனுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
வித்தியாசமான வெடிப்புச்சத்தம் கேட்டது. பாரிய குண்டுச்சத்தத்தை அடுத்து சிறிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
காயங்கள் பலமானதாக இருந்ததால் மருத்துவ அதிகாரிகளால் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒருவர் தனது காலின் கீழ்ப் பகுதியில் காயமடைந்த நிலையில் வந்தார்.
அவரது காயத்தை மருத்துவ அதிகாரிகள் சுத்தம் செய்த போது, கிளஸ்டர் குண்டின் சிறியதொரு வெடிக்காத பாகம் உள்ளிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனால், குண்டு இருந்த அவரது முழங்காலுக்கு கீழான பகுதியை மருத்துவ அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.
அவரது காலுக்குள் குண்டு இருந்தது.
அதனை செயலிழக்க வைப்பது பாதுகாப்பற்றது என்பதால், அவரது கால் அகற்றப்பட்டு வீசப்பட்டது.“ என்றும் அந்த மருத்துவப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஏபி பெற்றுக் கொண்ட ஒரு ஒளிப்படத்தில், ஒருவரது முழங்காலுக்குக் கீழ் உலோக உருளை ஒன்று புதைந்துள்ளதை காணமுடிகிறது.
இதை தொழில்நுட்ப வல்லுனர்களிடம் காண்பித்தபோது, அது ஒரு கிளஸ்டர் குண்டு தானா இல்லையா என்பதை கூறமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஏபி குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போரின் போது, பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் என்றும் இவர்களில் பலர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டினால் ஏற்பட்டிருக்கக் கூடிய எரிகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஏபி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அந்த மருத்துவப் பணியாளர், “வெள்ளைப் பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களுடன் நோயாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிக்கருகே சென்று பார்த்தபோது அந்த இடம் கருகிப் போயிருந்தது“ என்றும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்துலக சட்டங்கள் தடை செய்யவில்லை.
ஆனால் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவது மனிதஉரிமை அமைப்புகள் போர்க்குற்றம் என்று கூறுவதாகவும் ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஐ.தே.க இரு குழுக்களிடையே நேற்று கடும் மோதல்!
மத்துகம – அகலவத்தை பிரதேசத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் இருதரப்புக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாகாண சபை உறுப்பினர்களான சிறிலால் லக்திலக்க, மைத்திரி குணரத்ன ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும அங்கு சென்ற நிலையில், முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்துகம அமைப்பாளராக செயற்படும் தமது அனுமதியின்றி குறித்த பிரதேசத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமைக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்போது, தேவப் பெருமவுடன் வந்த குழுவுக்கும், மற்றைய தரப்பினருக்கும் இடையில் மோதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மே தினப் பேரணியில் கையெழுத்து வேட்டை!
தமிழினம் ஓர் தனித்துவமான இறையாண்மை உள்ள இனம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும், பிரித்தானிய பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பான இணையத்தள மனுவில் கையொப்பங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளும் பிரத்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொண்டுள்ளது. இப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு இணைய தள மனுவில் கையெழுத்துப் பெறுவதற்கு உதவ விரும்புவோர் முற்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறும், கொண்டுசெல்லும் இணையத்தள வசதிகள் உள்ள மடிக் கணணி(Laptop) உள்ளவர்கள் இவ் இணையவழி கையொப்பமிடலுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். காலம்: 1 May 2012 10:30 செவ்வாய் கிழமை. நடை பெறும் இடம். Clerkenwell Green EC1 (nearest tube � Farringdon) தொடர்புகளுக்கு: begin_of_the_skype_highlighting 020 8808 0465 end_of_the_skype_highlighting 078 2544 8753 begin_of_the_skype_highlighting 078 2544 8753 |
27 ஏப்ரல் 2012
ஐ.நா.வருகையையொட்டி அகற்றப்படும் காவலரண்கள்!

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய சந்திப்புக்கள் பலவற்றையும் நடத்தவுள்ளது என்று அறியமுடிகின்றது.
இதன்படி, இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும்.
இலங்கை அரசின் வெளிவிவகார நடவடிக்கைகளைக் கையாளும் முக்கியஸ்தர்களையும் ஐ.நா. குழு சந்தித்துப் பேச்சு நடத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அந்தச் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்து வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து ஐ.நா. அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றும் அறிய முடிகிறது.
இலங்கைப் பயணத்தை முடித்துகொண்டு திரும்பும் ழுகு தனது ஆய்வறிக்கையை நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கையளிக்கும் என கொழும்பிலுள்ள இராஜதந்திரியொருவர் நேற்று மாலை தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வருட இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இந்தக் குழு ஆராயும் என அறியமுடிகிறது.
வன்னியில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த படை அரண்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு நேராக மறைவான காட்டுப் பகுதிகளில் மீளவும் அமைக்கப்பட்டுவருவதாக வன்னியில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 ஏப்ரல் 2012
சிறிலங்கா படைகள் வீசிய கிளஸ்டர் குண்டுகள் – ஐ.நாவிடம் ஆதாரங்கள்!

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைத் திட்ட தொழில்நுட்ப ஆலோசகர் அலன் போஸ்ரன் என்ற நிபுணரே, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இவர், புதுக்குடியிருப்பில் கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.
“கடந்த மாதம் புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உலோகங்களைப் பிரிக்க முற்பட்ட பையன் ஒருவர் அது வெடித்ததில் உயிரிழந்தான். அவனது சகோதரி படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக நிழற்படங்களை விசாரணைக் குழுவினர் ஆராய்ந்த போது, கிளஸ்டர் குண்டின் வெடிக்காத சிறிய பகுதிகளை சேகரித்து வீட்டில் வைத்திருந்த போதே, அந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதை கண்டறிய முடிந்தது.
சிறிலங்காவில் வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்தடவை.
இதுபற்றி சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, சிறிலங்காப் படைகள் போரின்போது கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நாவிடம் இருந்தும் உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை.
2009 பெப்ரவரி மாதம், சிறிலங்கா அரசினால் போர்தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா முதல்முறையாக தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதை நிராகரித்தது.
அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில், போர் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்காப் படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
சில காயங்கள் கிளஸ்டர் குண்டினால் ஏற்பட்டவை போன்றிருப்பதாகவும் இதுபற்றி மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு கூறியிருந்தது.
தற்போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஐ.நாவிடம் சிக்கியுள்ளதால், சிறிலங்கா மீதான அனைத்துலக போரக்குற்ற விசாரணை அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 ஏப்ரல் 2012
சிங்களம் என்றும் ஏறி மிதிக்குமே தவிர கெளரவப்படுத்தாது!

முதலில் இந்தப் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. பிரேரணையை சமர்ப்பித்த முஜிபுர் ரகுமான் அங்கு உரையாற்றுகையில்;
இலங்கையின் பெயரை உலகளவில் கொண்டு சென்றவர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. இதனைக் கருத்திற் கொண்டே லிபட்டி பிளாஸா சுற்றுவட்டம் முதல் ஹோட்டன் பிளேஸ் சுற்றுவட்டம் வரையான கிறீன் பாத் வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இப்பாதையில் தேசிய நூலகம், கலாபவனம் மற்றும் மகாவலி கேந்திர நிலையம் என கலையம்சம் பொருந்திய கட்டிடங்கள் அமைந்துள்ள நிலையிலேயே அவரது பெயர் சூட்டப்பட்டது.
இப்போது இப்பாதைக்கு நெலும்பொக்குண மாவத்தை எனப் பெயர் மாற்றியதன் மூலம் அவரை அகௌரவப்படுத்தியுள்ளனர். தெற்காசிய கலைகளை, பௌத்த கலாசாரங்களை உலகுக்கு தெரியப்படுத்திய சுவாமி ஆனந்த குமாரசுவாமியின் பெயரை மீண்டும் அவ்வீதிக்கு இடுவதற்கு மாகாண சபை உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆளும் கட்சி பிரதம கொறடா ரேணுகா பெரேரா பேசுகையில்;
முஜிபுர் ரகுமான் இடதுசாரிக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்தவர். அவர் ஏன் இனவாதியாக மாறினாரெனத் தெரியவில்லை. நாங்கள் பாதையின் பெயரை மாற்றவில்லை. அந்த நீண்ட வீதியின் ஒரு பகுதியை மட்டுமே நெலும் பொக்கிண மாவத்தையென மாற்றியுள்ளோம். சீனா இந்தக் கலைக்கூடத்தை பல கோடி ரூபா செலவளித்து கட்டியதைக் கௌரவப்படுத்துவதற்கே பாதைக்கு நெலும் பொக்குணவென பெயரிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் சபையின் குழுத்தலைவர் குமரகுருபரன் இங்கு பேசுகையில்;
சபையில் கலாயோகி ஆனந்த குமாரசாமியின் பெயரை உச்சரித்த போது, இனவாதியென உறுப்பினர்களிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. இது மிகவும் கவலையளிக்கின்றது. அன்று கலாயோகி ஆனந்த குமாரசாமியை கௌரவப்படுத்தி அரசாங்கம் முத்திரை வெளியிட்டது. அத்துடன் தெற்காசிய கலைகளை உலகுக்கு எடுத்துக்காட்டியதற்காக அந்த வீதிக்கு அவரது பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்தியது. தற்போது அவ்வீதியின் அரைவாசிக்கு நெலும் பொக்குண என பெயர் மாற்றியதன் மூலம் பாதையில் அரைவாசியைப் பறித்தெடுத்துள்ளனர். இது அவரை அகௌரவப்படுத்தும் செயலாகுமென்றார்.
இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்ததால் பிரேரணை 24 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
24 ஏப்ரல் 2012
படைபலம் கொண்டு தமிழ் மக்கள் அடக்கப்படுகின்றனர்!

எதிர்வரும் மே தினக் கூட்டம் நவசமசமாஜக் கட்சி ஒன்றில் கொழும்பில் தனியாக நடத்தும் அல்லது வேறு இடதுசாரி அரசியல் , தொழில் சங்க அமைப்புகளுடன் கை கோர்த்து நடத்தும்.
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள இணைந்த எதிரணிக் கட்சிகளின் மே தினக் கூட்டத்திலும் நவசம சமாஜக்கட்சி பங்குகொள்ளும் இதன் காரணமாக சில அரசியல் வட்டாரங்களில் இருந்து விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பல கட்சிகள் பங்கு கொள்ள இருக்கின்றன. மேற்படி பிரதான இரு கட்சிகளினதும் கொள்கைகளுக்கும் நவசம சமாஜக்கட்சியினதும் கொள்கைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
இது யாவருக்கும் தெரிந்த உண்மை நிலையாகும். குறிப்பாக தமிழ்த் தேசியப் பிரச்சினையை பொறுத்த வரை தமிழ் மக்களினது சுயநிர்ணய உ ரிமை அவர்களின் தாயகம் ஆகியவற்றை பொறுத்த வரை நவசம சமாஜக் கட்சி அவற்றை அங்கீகரிப்பதுடன் அதற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் வருகின்றது.
இதே நேரம் இன்றைய கால கட்டத்தில் போருக்கு பின்னரான காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களை பெரியளவில் படைபலத்துடன் ஒடுக்கி வருகின்றது. எனவே இத்தகைய கொடிய ஒடுக்கு முறை செயற்பாட்டுக்கு எதிராக அனைத்து எதிர் சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்துவது தொடர்பாக நவசம சமாஜக் கட்சி எண்ணுகின்றது.
மாறாக மேற்படி இரண்டு கட்சிகளுடனும் வேறு எந்த வகையான விலை போதல் செயற்பாடுகளுக்கும் நவசமசமாஜக் கட்சி ஒரு போதும் வளைந்து கொடுக்க மாட்டாது. அங்ஙனம் எவரும் எண்ணுவார்களாயின் அவர்களின் அரசியல் ஞானம் பெரிதாக வளர்ச்சி பெறவில்லை என்றே நவசம சமாஜக் கட்சி கருதுகின்றது.
போராட்டங்களின் ஊடாகவே இந்த ஆட்சியை பலவீனப்படுத்த முடியும். அதனையே நவசம சமாஜக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட இருக்கின்ற மே தினத்தை ஒரு போராட்ட வடிவமாகவே நவசம சமாஜக் கட்சி பார்க்கின்றது. எத்தகைய போராட்ட செயற்பாடுகளும் இன்றி வெறும் விமர்சனங்களை முன்வைப்பதாலும் ஆட்சியாளர்களே பயன்பெறுவர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வைரம் பாய்ந்து உறுதியாக இருக்கும் தமிழ்த் தேசிய உணர்வு கரைந்து போய் விடுமென யாரும் நினைத்தால் அது சொல்கின்றவரின் பலவீனத்தின் வெளிப்பாடு என்றே அடையாளம் காண முடியும்.
நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த யாரும் அருகில் நெருங்க முடியாது இன்றைய கால கட்டத்தில் போராட்ட வடிவங்கள் ஊடாகவே தமிழ் மக்களின் விடுதலைப் பேராட்டத்தை முன்கொண்டு செல்ல முடியும் இதுவே நவசம சமாஜக் கட்சியின் நம்பிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
23 ஏப்ரல் 2012
முற்போக்கு சோசலிச கட்சிக்குள்ளும் பிளவு!

இதனிடையே, முற்போக்கு சோசலிச கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் போராட்ட இயக்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் கெலும் அமரசிங்கவும் தமது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவர் தற்போது, கட்சியுடன் உள்ளக ரீதியான விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவினால் திணிக்கப்பட்டதே 13வது திருத்தம் என்கிறார் தேரர்!
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் என்பது இந்தியாவினால் இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட தேவையற்ற சுமையாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குற்றம்சுமத்தியுள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவுகள் தொடர்பில் கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதியின் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

ஜாதிக ஹெல உறுமய கட்சி 13 பிளஸ், 13 க்கு அப்பால் அல்லது 13 மைனஸிற்கு ஆதரவளிக்காது.. தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற தேவை கிடையாது.
இன ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக பிளவடைந்து வாழ வேண்டுமென பொதுமக்கள் கருதவில்லை. தமிழ் மக்கள் அமைதியான முறையில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
22 ஏப்ரல் 2012
மீண்டும் இலங்கை வருவேன் என்கிறார் குமார்!

தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
உங்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு திரும்பிவர முயற்சிக்கிறீர்களா என வினவப்பட்டபோது
‘நாம் மார்க்ஷிஸம், லெனினிஷஸம் ஆகியவற்றை பின்பற்றுபவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் பணியாற்றுகிறோம். உலகில் எந்த பாகத்திலிருந்தாலும் நாம் அவர்களுக்காக பணியாற்றலாம் அவர்களின் மொழி, நாடு, இன அடையாளங்கள் எம்மை பாதிக்காது. ஆனாலும் இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதில் நான் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன்.
என்னை நாடுகடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து தன்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் இம்மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதை தடுக்க அவர்களால் முடியாது. தற்போதைய ஜனநாயக விரோத போக்கில் மாற்றமொன்றை ஏற்படுத்திய பின்னர் நிச்சயமாக நான் இலங்கை மக்களுக்காக சேவையாற்ற வருவேன்’ என அவர் பதிலளித்தார்.
குமார் குணரட்ணத்திடம் கேட்கப்பட்ட மேலும் சில கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: நீங்களும் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டமை தொடர்பாக வதந்திகள் உள்ளன. பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அரசியல் லாபங்களுக்காவும் நீங்களாகவே காணாமல் சிலர் கூறுகிறார்கள். உங்கள் பதில் என்ன?
பதில்:இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத பாதையை காட்டுகிறது. நாம் ஆயுதகுழுவொன்றின் மூலம் கடத்தப்பட்டோம். எனினும் பொலிஸாருக்கூடாக விடுவிக்கப்பட்டோம். இந்த நாடகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை. நாம் இழிவான விடயங்களை செய்வதில்லை. எமக்கு முன்னாலுள்ள அரசியல் சவால் குறித்து எமக்கு ஆழமான அரசியல் அறிவு உள்ளது. அந்த சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
கேள்வி: நீங்கள் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தினீர்கள். இதற்காக நீதி தேடி சர்வதேச அமைப்பொன்றிடம் செல்லும் யோசனை உங்களிடம் உள்ளதா? அப்படியானால் முதலில் என்ன செய்வீர்கள்?
பதில்: ஆட்சியாளர்கள் எனது வாழ்க்கையை அழிக்க விரும்பினார்கள். எமது அரசியல், நெறிமுறையை அழிக்கவும் அவர்கள் முயற்சித்தார்கள். எனக்கு இழைக்கப்பட் அநீதி குறித்த விடயத்தை உலகெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளிடம் கொண்டு செல்வேன். ஆனால் முதலாளித்துவ முறைமையின் கீழ் இயங்கும் எந்த நீதிமன்ற அமைப்பிற்கும் நான் செல்லப்போவதில்லை.
கேள்வி: குடிவரவு, குடியகல்வு சட்டத்தை நீங்கள் மீறியதாக குற்றம்சுமத்தப்படுகிறது. இது தொடர்பாக இங்கு அல்லது நீங்கள் தங்கியிருக்கும் அவுஸ்திரேலியாவில் ஏதாவது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்களா?
பதில்: முதலாளித்துவ சட்டத்தின்கீழ்கூட உயிர்வாழ்வதற்கான உரிமையானது ஏனைய எல்லாவற்றையும்விட மேலானதாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஜனநாயக விரோத ஆட்சியில் அந்த உரிமை ஆபத்துக்குள்ளாகி உள்ளது. இலங்கையில் ஊடகத்துறைக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உயிருக்குப் பயந்த ஊடகவியலாளர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். வேறு சிலர் தமது அடையாளங்களை மறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை ஊடகத்துறைக்கும் அரசியலுக்கும் பொதுவானது.
இலங்கையிலோ வெளிநாட்டிலோ எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக நான் தயார். அத்துடன் மக்களிடம் சென்று எனது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கவும் நான் தயார். சில வருடங்களுக்கு முன்னர் கருணா அம்மானுக்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அரசாங்கம் போலி கடவுச்சீட்டொன்றை பயன்படுத்தியது. அவரை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு அரசாங்கம் கோரப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு வேறு ஒரு சட்டம் இருக்க முடியாது.
கேள்வி: நீங்கள் கடத்தப்பட்டு, பின்னர் பொரளையிலுள்ள கொழும்பு குற்றப் பணியகத்திற்கு அனுப்பப்பட்டவுடன் அங்கு உங்கள் கடவுச்சீட்டை கொண்டுவர அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு எப்படி முடிந்தது?
பதில்: இவை அபத்தாமான குற்றச்சாட்டுகள். எனது கடத்தலின் பின்னர், காணாமல் போன அவுஸ்திரேலிய பிரஜையின் கடவுச்சீட்டு விபரங்களை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகாரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோரியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த எமது கட்சியின் சக செயற்பாட்டாளர்கள், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திடம் எனது கடவுச்சீட்டை ஒப்படைத்தனர். அனைத்து ஆவணங்களையும் எனது கட்சி அங்கத்தவர்களிடம் கொடுத்திருந்தேன். அதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.
21 ஏப்ரல் 2012
ஐ.நா.தூதராக எரிக் சொல்கைம்?

தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார்.
ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர்.
எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் நிலையில், போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பணியாற்றுகின்ற நிலையில், எரிக் சொல்ஹெய்ம் அவருக்குத் தலைவலி கொடுக்கலாம் என்று சிறிலங்கா கலக்கமடைந்துள்ளது.
ஐ.நாவுக்கான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டால், அது சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசதரப்பு எதிர்பார்க்கிறது.
சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுநோர்வே பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகிறது.
சில காலங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் கூட இதையே வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறான ஒருவர் ஐ.நாவில் உயர் பதவியைப் பெறுவது தமக்கு நெருக்கடியாக அமையும் என்று, சிறிலங்கா அரசதரப்பு கலக்கமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 ஏப்ரல் 2012
இந்தியக்குழு உல்லாசப் பயணமே மேற்கொண்டுள்ளது!
இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா. இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகவும் அவர்களது நோக்கம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ள அவர் மேலும் கூறுகையில் "தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்று ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இலங்கை அரசிற்கு தெரிவிக்காத இந்திய பாராளுமன்ற குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப் பயணமாகும். யுத்தம் முடிந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் சென்று குடியேற முடியாத நிலையிலேயே இராணுவம் தடையாக உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கண்டும் காணாதவர்களாக இலங்கைக்குள் சுற்றுப் பயணம் செய்யும் மேற்படி இந்தியக் குழு, அழுத்தமாக எதையும் கூறாமல் அதிகாரத்தை பரவலாக்குங்கள், மக்களை மீள குடியேற்றுங்கள் என்றெல்லாம் "பம்மாத்து" காட்டுகின்றது. தற்போது தலையாடடும் இலங்கை அரசு எதிர்காலத்தில் எதையும் செய்யாது என்;பதே உண்மை. எனவே ஏமாற்றப்படப் போகின்றவர்கள் தமிழ் மக்களே" இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா தெரிவித்துள்ளார். |
கடத்திச் செல்லப்பட்டுள்ள லலித், குகன் குறித்து திடுக்கிடும் தகவல்கள்!

கடந்த 12ஆம் திகதி இரவு முதல் தெமட்டகொடவிலுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித், குகன் ஆகியோர் நேற்று (19) அதிகாலை 2.20 அளவில் அந்த இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடந்த 12ஆம் திகதி எமது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனையடுத்து அன்றிரவே இவர்கள் இருவரும் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர். இந்தத் தகவல் அன்றைய தினமே எமக்குக் கிடைத்த போதிலும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய உயிர் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்தத் தகவல்களை நாம் உடனடியாக வெளியிடுவதைத் தவிர்த்துக் கொண்டோம்.
எனினும், நேற்று அதிகாலை AA-C026 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட வெள்ளை நிற லென்ரோவ் ஜீப் வாகனத்திலும், இருபுறமும் கறுப்புக் கண்ணாடிகளினால் மறைக்கப்பட்ட டொயட்டா ரக வாகனத்திலும் இவர்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
”இந்த இரண்டு வாகனங்களும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த அலுவலகத்திற்கான மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த அலுவலகத்திற்கு அண்மித்த வீதியில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடையில் நின்றுகொண்டிருந்தவர்களும் அங்கிருந்து அப்புறுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு வாகனங்களும் வந்த நொடிப்பொழுதில், தலை முதல் கால் வரை முழுமையாக துணியினால் மறைக்கப்பட்ட வண்ணம் லலித், குகன் ஆகிய இருவரும் இந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு வேறு இடடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இவ்வாறு கடத்தப்பட்டு அங்கு கொண்டுவருபர்களின் கண்கள் மட்டுமே வழமையாக கட்டப்பட்டிருக்கும் என்ற போதிலும், லலித், குகன் ஆகியோர் தலை முதல் கால் வரை மறைக்கப்பட்டிருந்தனர். அலுவலகத்திலுள்ள வேறு எவரும் அடையாளம் காணாத வகையிலேயே இவ்வாறு முழுமையாக மறைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வாகனத்தில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவர் நீள்காற்சட்டடை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மற்றைய நபரின் பாதம் வரை முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டே நடந்துசென்றனர்” என அந்த நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.
லலித், குகன் ஆகிய இரவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டடத் தொகுதியில் தடுத்து வைக்கப்படவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரொஹன எனப்படும் ‘சாப்பாட்டு ராமன்” ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ஏப்ரல் 12ஆம் திகதி இரவின் பின்னரே உண்மையானது. காரணம் அன்றைய தினம் இரவே லலித், குகன் ஆகியோர் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
லலித், குகன் ஆகிய இருவரும் நேற்று (19) காலை வரை உயிருடன் இருந்தனர் என்பதை நாம் மிகவும் பொறுப்புடனும், உறுதியுடனும் கூறிக்கொள்கிறோம். அத்துடன், அந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனநாயக விரும்பிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும், மனித நேயம் படைத்தவர்களையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி:சரிதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)