30 ஏப்ரல் 2012

தமிழ் உணர்வு பீறிட்டு கிளம்புகிறது கருணாநிதிக்கு"பழ,கருப்பையா சீற்றம் !


இலங்கையில் தமிழீழம் தனித்ததொரு நாடாக அமைய மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திடீரென்று இன உணர்வு பீறிட்டுக் கிளம்பப் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்! குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குப் பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி!
மூன்றாண்டுகளுக்கு முன்வரை போராடுவதற்கு ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தது. அப்போது பேசியிருக்க வேண்டும் இதை! அப்போது சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்; தமிழீழம் சாத்தியமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்; இப்போது "ஈழம் எங்கள் தாகம்' என்று புறப்பட்டு விட்டார்!
அதை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பம் போடுகிறார் கருணாநிதி! ஈழத்தை இந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தியதே தானும் மத்திய அரசும்தான் என்பதை மூன்றாண்டுகளில் மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதிக் கொண்டு! யாருடைய தயவும் இல்லாமல் ஈழம் பல ஆண்டுகள் ஓர் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே இருந்தது. வரி வசூல் நடந்தது; காவல் நிலையங்கள் செயல்பட்டன; நீதிமன்றங்கள் இயங்கின; சாலைகள் போடப்பட்டன!
ஐ.நா. அவையில் அது ஓர் உறுப்பு நாடாக இல்லை என்பதைத் தவிர வேறு எந்த நிலையிலும் அது குறைவுடையதாக இல்லை.
சிங்கள தேசியம் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தது! பெரும்பான்மையான மக்களைச் சிறுபான்மை மக்கள் ஒரு கோட்டுக்கு இந்தப்புறம் வராதவாறு நிறுத்தி வைத்திருந்த வியப்பு உலக வரலாற்றில் முதன் முதலாக அரங்கேறியது! இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இனவாதம் ஒரு நேரத்திற்காகக் காத்திருந்தது.
ஒரு பெரிய வரலாற்று வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி அரசும் மன்மோகன் அரசும் சிறுபான்மை அரசுகள்; ஒன்றை ஒன்று முட்டுக் கொடுத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருந்தவை! காங்கிரஸ் எப்போதுமே பெரிய அண்ணன்தான்! கருணாநிதி எப்போதுமே வாலைக் காலுக்குள் வைத்துக் கொண்டு தில்லி பீடத்திற்குப் பவ்வியமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்தான்!
தமிழ் ரத்தத்தை மண்ணில் தெறிக்கச் செய்கிற மன்மோகன் அரசின் கூட்டணியில் தி.மு.க. இருக்காது என்று கருணாநிதி எகிறி இருந்தால், மத்திய அரசு கவிழும் நிலையும், அதன் எதிர்விளைவாகக் கருணாநிதி அரசு தமிழ்நாட்டில் கவிழும் நிலையும் ஏற்பட்டிருக்கும்! ஆனால் ஈழத்தில் போர் நின்றிருக்கும்!
ஈழம் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே நீடித்திருக்கும்! சுதந்திர நாடாக இருந்த ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டு, "மீண்டும் தமிழீழம் மலரும்' என்று எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? இனி எதிலிருந்து தமிழீழத்தை மலரச் செய்வது? சாம்பலிலிருந்தா? சொல்லிப் பார்ப்பதற்குக் கூடக் கருணாநிதிக்குக் கூச்சமாக இல்லையா? எந்த விடுதலை இயக்கமும் தன் இலக்கை இன்றோ, என்றோ அடையாமல் முற்றுப் பெறுவதென்பதே இல்லை! ஆனால் அதைச் சொல்லுகின்ற தகுதி அதை அழிப்பதற்குத் துணை போனவர்க்கு உண்டா என்பதே கேள்வி! சீனத்தில் டெங்சியாபிங் முதலாளித்துவக் கொள்கைக்கு மாறினார்; அது குற்றமில்லை. ஆனால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சியின் பெயரால், செங்கொடியின் பெயரால், அரிவாள் சுத்தியலின் பெயரால், வர்க்கமற்ற சமூகக் கொள்கையின் பெயரால், வர்க்க பேதமுள்ள சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு, அதற்கு நேர்மாறான அடையாளத்திற்குள் ஒளிந்து கொள்ள நினைத்தாரே, அதுதான் குற்றம்! டெங்சியாபிங் தியானன்மென் சதுக்கத்தில் திரண்டிருந்த பல லட்சம் சொந்த உடன்பிறப்புகள் மீது, பகை நாடுகளில் பயன்படுத்த வேண்டிய டாங்கிப் படையை ஏவி ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றொழித்தாரே; எதற்கு? குடியாட்சி வேண்டுமென்று கேட்டதற்காகத்தானே? டெங்சியாபிங்கின் முதலாளித்துவக் கொள்கைகளைக் குடியாட்சியின் வழியாக நிறைவேற்ற முடியாதா? இவ்வளவு படுபாதகக் கொலைகள் ஏன்? இன்னும் சொன்னால் முதலாளித்துவம் தன்னுடைய வசதிக்காகத் தோற்றுவித்துக் கொண்ட அமைப்புத்தானே ஜனநாயகம்! சீனத்தில் இன்னமும் மாவோ வாழ்கிறார்; ஆனால் மாவோவின் கொள்கைகள் மட்டும் சாகடிக்கப்பட்டுவிட்டன.
மாவோ தோற்றுவித்த கட்சியும், மாவோவின் புகழும், அதற்கு நேர்மாறான கொள்கை மாற்றம் சீனாவில் நிகழ்ந்த போதே அழிந்திருக்க வேண்டும்! அதுதான் இயற்கை!
ஆனால், மாவோவின் கொள்கைகளை அழித்தபோது, மாவோ தோற்றுவித்த பொதுவுடைமைக் கட்சி கொதித்தெழவில்லை! பொறுத்துக் கொண்டது! ஆனால், மாவோ உண்டாக்கிய கட்சி அமைப்பை, அதன் வழி நிறுவப்பட்ட ஆட்சி முறையைப் பல லட்சம் மாணவர்கள் அழித்து விடுவார்களோ என்னும் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, டெங்சியாபிங்கிலிருந்து கட்சியின் கிளைக் கழகச் செயலாளர் வரை கொதித்தெழுந்தனர்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள மாவோ வேண்டும்; அவர் நிறுவிய கட்சி வேண்டும்; அவர் பிடித்த செங்கொடி வேண்டும்! அடையாளங்கள்தாம் முக்கியம்; மக்கள் மாற்றங்களை ஊடுருவி உணர மாட்டார்கள்! மேலே இருந்து கீழே வரை உள்ள அதிகாரப் பங்கீட்டைக் குலைக்காத வரை, எந்தக் கட்சியும் எந்தக் கொள்கைக் கைகழுவல்களையும் பொறுத்துக் கொள்கிறது!
பொதுவுடைமைக் கோட்பாட்டைக் காப்பாற்றப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சி முறையால்தான் முடியும் என்று மார்க்ஸ் திண்ணமாக நம்பினார்! ஆனால், முதலாளித்துவத்தைக் காப்பாற்றவும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தால்தான் முடியும் என்று டெங்சியாபிங் மெய்ப்பித்ததை அறிந்தால் மார்க்ஸ் மயக்கமடைந்து விடுவார்! இது காலத்தின் கேலிதானே!
ஈழத்தை அழிப்பதற்குத் துணை நின்றார் தலைவர் என்றபோதே தமிழினத்தின் மேம்பாட்டுக்காக அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சி கொதித்தெழுந்திருக்க வேண்டாவா? நடக்கவில்லையே! ஏன்? மேலே இருந்து கீழே வரை, முதல்வரிலிருந்து ஊராட்சித் தலைவர் வரை, ஒரு மாநிலத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!
ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக அதிகாரத்தை உதறுவது என்பது தலைவருக்கும், தலைவரின் வெவ்வேறு குடும்பங்களுக்கு மட்டுமல்ல; கடைசிப் படிக்கட்டு அதிகாரத்திலிருப்பவனுக்கும் இயலாதது! இது போன்றவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பவர் கருணாநிதி! அந்தக் கட்சியிலேயே அண்ணாவோடு உரசிப் பழகி ஊற்றம் பெற்ற அன்பழகனே, கருணாநிதி ஈழத்தைப் பதவிக்காகக் கைகழுவியபோது, "என்னால் இது முடியாது' என்று அமைச்சர் பதவியை உதறி விட்டு வெளியேறவில்லையே! இனம் அழிகின்றபோதும் ஒரே கட்சியில் மாறாமல் இருப்பது ஒரு சிறப்பா?
கொள்கையை விற்று விட்டுக் கேவலம் "கட்சிக் கற்புப்' பாராட்டுகிற அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் பெய்கின்ற மழையும் நின்று விடாதா?
எல்லாருக்குமே அடையாளங்களில்தான் எல்லாம் என்றாகி விட்டது! அண்ணா தோற்றுவித்த கழகம், அண்ணா தந்த கொடி, அண்ணா தந்த சின்னம், டி.எம். நாயரிலிருந்து தொடர்ச்சியுடைய ஒரு கட்சி என்று சொல்லும்போதும், திராவிட இயக்க நூற்றாண்டு விழாக் கொண்டாடும்போதும் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனின் மனத்திலும் ஒரு பெருமிதம் உண்டாகிறது! ஈழம் சுடுகாடாகத் துணைபோனது அந்தப் பெருமிதத்தில் மறைந்து விடாதா?
கருணாநிதியைத் தவிர அந்தக் கட்சியை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது! சிறு பிள்ளைகள் கீழே போட்டு உடைத்து விடுவார்கள் என்று நினைக்கிறார்களே, இது எத்துணை பெரிய சிறுபிள்ளைத்தனம்? பழைய பாட்டை ரீ-மிக்ஸ் செய்து பாட வேண்டியதுதானே! மீண்டும் தமிழீழம் என்னும்போது, "எப்படி?' என்னும் கேள்வி எழும்!
ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழ விடுதலையைப் பெற வேண்டியதுதானே என்று முழங்கினால், "தலைவர் கொள்கையை எப்போது மறந்தார்' என்று தொண்டன் புளகாங்கிதம் அடைய மாட்டானா?
சூடான் நாட்டிலிருந்து தெற்குச் சூடான் என்னும் தனிநாடு 2011}இல் ஐ.நா. வாக்கெடுப்பின் மூலம் உருவாகவில்லையா?
அதுபோல் தமிழீழத்தை உருவாக்கலாம் என்று கருணாநிதி மெய்விளக்கச் சான்றுகளோடு சொல்லும்போது, உடன்பிறப்புகளுக்கு மெய் புல்லரிக்காதா? 2006}லேயே செர்பியாவிலிருந்து கொசோவா என்னும் தனிநாடு இதே அடிப்படையில் பிரிந்திருக்கும்போது, இப்போது சொல்வதை அப்போதே சொல்லி, 2009}இல் நடந்த நான்காம் ஈழப் போரைத் தவிர்த்திருக்கலாமே கருணாநிதி!
ஈழத்தில் 45,000 பெண்கள் விதவைகளாகி இருக்கமாட்டார்களே! அவ்வளவு எளிதா சுதந்திரம்?
""அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்; அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே'' என்றார் பாரதிதாசன்!
கருணாநிதியின் நோக்கம் கொள்கை மாறவில்லை என்பதுபோல் காட்டிக் கொஞ்சம் தமிழ்ச் சொரணை உள்ளவர்களை நம்ப வைப்பது! கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவைப் போர்க் குற்றவாளியாக்க ஐ.நா. வாக்கெடுப்பால் முடிந்ததா? வாக்கெடுப்பின் மூலம் விடுதலை பெறுவாராம் கருணாநிதி! கேப்பையிலே நெய் வடிகிறது என்கிறார் கருணாநிதி! ராஜபட்ச போர்க் குற்றவாளியா இல்லையா என்று விசாரிக்க ராஜபட்ச அரசின் அனுமதி வேண்டும் என்று தீர்மானத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்து விட்டுத்தானே அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது!
எது எப்படியானால் என்ன?
"மகாத்மா காந்திக்கு ஜே!' என்று காங்கிரஸ் புறப்படும்!
"திராவிட இயக்க நூற்றாண்டு விழா' என்று கருணாநிதி புறப்படுவார்!
காந்தி, அண்ணாவின் கொள்கைகளா முக்கியம்?
காந்தி, அண்ணாவின் பெயர்கள்தாமே முக்கியம்!
அடையாளங்களில்தானே அரசியல் நடக்கிறது!
-தினமணி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக