27 ஏப்ரல் 2012

ஐ.நா.வருகையையொட்டி அகற்றப்படும் காவலரண்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என்றும் இதனை ஒட்டி வன்னியில் உள்ள படை அரண்கள் அகற்றப்பட்டு மறைவான இடங்களில் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்பட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளது.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய சந்திப்புக்கள் பலவற்றையும் நடத்தவுள்ளது என்று அறியமுடிகின்றது.
இதன்படி, இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும்.
 இலங்கை அரசின் வெளிவிவகார நடவடிக்கைகளைக் கையாளும் முக்கியஸ்தர்களையும் ஐ.நா. குழு சந்தித்துப்  பேச்சு நடத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அந்தச் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்து வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து ஐ.நா. அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றும் அறிய முடிகிறது.
இலங்கைப் பயணத்தை முடித்துகொண்டு திரும்பும் ழுகு தனது ஆய்வறிக்கையை நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கையளிக்கும் என கொழும்பிலுள்ள இராஜதந்திரியொருவர் நேற்று மாலை தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வருட இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இந்தக் குழு ஆராயும் என அறியமுடிகிறது.
வன்னியில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த படை அரண்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு நேராக மறைவான காட்டுப் பகுதிகளில் மீளவும் அமைக்கப்பட்டுவருவதாக வன்னியில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக