25 ஏப்ரல் 2012

சிங்களம் என்றும் ஏறி மிதிக்குமே தவிர கெளரவப்படுத்தாது!

ananthakumarasamisகொழும்பு7 இல் உள்ள கலாயோகி ஆனந்த குமாரசாமி மாவத்தையின் அரைவாசி பகுதி நெலும் பொக்குண மாவத்தையெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பழையபடி அந்த வீதிக்கு கலாயோகி ஆனந்த குமாரசாமியின் பெயரே சூட்டப்பட வேண்டுமெனவும் கோரி மேல் மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை கொண்டவரப்பட்ட பிரேரணை 24 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார். எனினும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்தப் பிரேரணையைத் தோற்கடித்தது.
முதலில் இந்தப் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. பிரேரணையை சமர்ப்பித்த முஜிபுர் ரகுமான் அங்கு உரையாற்றுகையில்;
இலங்கையின் பெயரை உலகளவில் கொண்டு சென்றவர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. இதனைக் கருத்திற் கொண்டே லிபட்டி பிளாஸா சுற்றுவட்டம் முதல் ஹோட்டன் பிளேஸ் சுற்றுவட்டம் வரையான கிறீன் பாத் வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இப்பாதையில் தேசிய நூலகம், கலாபவனம் மற்றும் மகாவலி கேந்திர நிலையம் என கலையம்சம் பொருந்திய கட்டிடங்கள் அமைந்துள்ள நிலையிலேயே அவரது பெயர் சூட்டப்பட்டது.
இப்போது இப்பாதைக்கு நெலும்பொக்குண மாவத்தை எனப் பெயர் மாற்றியதன் மூலம்  அவரை அகௌரவப்படுத்தியுள்ளனர். தெற்காசிய கலைகளை, பௌத்த கலாசாரங்களை உலகுக்கு தெரியப்படுத்திய சுவாமி ஆனந்த குமாரசுவாமியின் பெயரை மீண்டும் அவ்வீதிக்கு இடுவதற்கு மாகாண சபை உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆளும் கட்சி பிரதம கொறடா ரேணுகா பெரேரா பேசுகையில்;
முஜிபுர் ரகுமான் இடதுசாரிக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்தவர். அவர் ஏன் இனவாதியாக மாறினாரெனத் தெரியவில்லை. நாங்கள் பாதையின் பெயரை மாற்றவில்லை. அந்த நீண்ட வீதியின் ஒரு பகுதியை மட்டுமே நெலும் பொக்கிண மாவத்தையென மாற்றியுள்ளோம். சீனா இந்தக் கலைக்கூடத்தை பல கோடி ரூபா செலவளித்து கட்டியதைக் கௌரவப்படுத்துவதற்கே பாதைக்கு நெலும் பொக்குணவென பெயரிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் சபையின் குழுத்தலைவர் குமரகுருபரன் இங்கு பேசுகையில்;
சபையில் கலாயோகி ஆனந்த குமாரசாமியின் பெயரை உச்சரித்த போது, இனவாதியென உறுப்பினர்களிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. இது மிகவும் கவலையளிக்கின்றது. அன்று கலாயோகி ஆனந்த குமாரசாமியை கௌரவப்படுத்தி அரசாங்கம் முத்திரை வெளியிட்டது. அத்துடன் தெற்காசிய கலைகளை உலகுக்கு எடுத்துக்காட்டியதற்காக அந்த வீதிக்கு அவரது பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்தியது. தற்போது அவ்வீதியின் அரைவாசிக்கு நெலும் பொக்குண என பெயர் மாற்றியதன் மூலம் பாதையில் அரைவாசியைப் பறித்தெடுத்துள்ளனர். இது அவரை அகௌரவப்படுத்தும் செயலாகுமென்றார்.
இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்ததால் பிரேரணை 24 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக