20 ஏப்ரல் 2012

கடத்திச் செல்லப்பட்டுள்ள லலித், குகன் குறித்து திடுக்கிடும் தகவல்கள்!

 
Lalith_kuganகடத்திச் சென்று தடுத்துவைக்கப்பட்டு, மரணத் தருவாயில் உள்ள மக்கள் எழுச்சிய இயக்கத்தின் செயல்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 12ஆம் திகதி இரவு முதல் தெமட்டகொடவிலுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித், குகன் ஆகியோர் நேற்று (19) அதிகாலை 2.20 அளவில் அந்த இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடந்த 12ஆம் திகதி எமது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனையடுத்து அன்றிரவே இவர்கள் இருவரும் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர். இந்தத் தகவல் அன்றைய தினமே எமக்குக் கிடைத்த போதிலும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய உயிர் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்தத் தகவல்களை நாம் உடனடியாக வெளியிடுவதைத் தவிர்த்துக் கொண்டோம்.
எனினும், நேற்று அதிகாலை AA-C026 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட வெள்ளை நிற லென்ரோவ் ஜீப் வாகனத்திலும், இருபுறமும் கறுப்புக் கண்ணாடிகளினால் மறைக்கப்பட்ட டொயட்டா ரக வாகனத்திலும் இவர்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
”இந்த இரண்டு வாகனங்களும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த அலுவலகத்திற்கான மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த அலுவலகத்திற்கு அண்மித்த வீதியில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடையில் நின்றுகொண்டிருந்தவர்களும் அங்கிருந்து அப்புறுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு வாகனங்களும் வந்த நொடிப்பொழுதில், தலை முதல் கால் வரை முழுமையாக துணியினால் மறைக்கப்பட்ட வண்ணம் லலித், குகன் ஆகிய இருவரும் இந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு வேறு இடடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இவ்வாறு கடத்தப்பட்டு அங்கு கொண்டுவருபர்களின் கண்கள் மட்டுமே வழமையாக கட்டப்பட்டிருக்கும் என்ற போதிலும், லலித், குகன் ஆகியோர் தலை முதல் கால் வரை மறைக்கப்பட்டிருந்தனர். அலுவலகத்திலுள்ள வேறு எவரும் அடையாளம் காணாத வகையிலேயே இவ்வாறு முழுமையாக மறைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வாகனத்தில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவர் நீள்காற்சட்டடை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மற்றைய நபரின் பாதம் வரை முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டே நடந்துசென்றனர்” என அந்த நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.
லலித், குகன் ஆகிய இரவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டடத் தொகுதியில் தடுத்து வைக்கப்படவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரொஹன எனப்படும் ‘சாப்பாட்டு ராமன்” ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ஏப்ரல் 12ஆம் திகதி இரவின் பின்னரே உண்மையானது. காரணம் அன்றைய தினம் இரவே லலித், குகன் ஆகியோர் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
லலித், குகன் ஆகிய இருவரும் நேற்று (19) காலை வரை உயிருடன் இருந்தனர் என்பதை நாம் மிகவும் பொறுப்புடனும், உறுதியுடனும் கூறிக்கொள்கிறோம். அத்துடன், அந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனநாயக விரும்பிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும், மனித நேயம் படைத்தவர்களையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி:சரிதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக