22 ஏப்ரல் 2012

மீண்டும் இலங்கை வருவேன் என்கிறார் குமார்!

kumar2(8)தன்னை நாடுகடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து தன்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் இம்மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதை தடுக்க முடியாது என அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட, முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் கூறியுள்ளார்.
தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
உங்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு திரும்பிவர முயற்சிக்கிறீர்களா என வினவப்பட்டபோது
‘நாம் மார்க்ஷிஸம், லெனினிஷஸம் ஆகியவற்றை பின்பற்றுபவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் பணியாற்றுகிறோம். உலகில் எந்த பாகத்திலிருந்தாலும் நாம் அவர்களுக்காக பணியாற்றலாம் அவர்களின்  மொழி, நாடு, இன அடையாளங்கள் எம்மை பாதிக்காது. ஆனாலும் இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதில் நான் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன்.
என்னை நாடுகடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து தன்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் இம்மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதை தடுக்க அவர்களால் முடியாது. தற்போதைய ஜனநாயக விரோத போக்கில் மாற்றமொன்றை ஏற்படுத்திய பின்னர் நிச்சயமாக நான் இலங்கை மக்களுக்காக சேவையாற்ற வருவேன்’ என அவர் பதிலளித்தார்.
குமார் குணரட்ணத்திடம் கேட்கப்பட்ட மேலும் சில கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: நீங்களும் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டமை தொடர்பாக வதந்திகள் உள்ளன. பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அரசியல் லாபங்களுக்காவும் நீங்களாகவே காணாமல்  சிலர் கூறுகிறார்கள். உங்கள் பதில் என்ன?
பதில்:இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத பாதையை காட்டுகிறது. நாம் ஆயுதகுழுவொன்றின் மூலம் கடத்தப்பட்டோம். எனினும் பொலிஸாருக்கூடாக விடுவிக்கப்பட்டோம். இந்த நாடகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை. நாம் இழிவான விடயங்களை செய்வதில்லை. எமக்கு முன்னாலுள்ள அரசியல் சவால் குறித்து எமக்கு ஆழமான அரசியல் அறிவு உள்ளது. அந்த சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
கேள்வி: நீங்கள் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தினீர்கள். இதற்காக நீதி தேடி சர்வதேச அமைப்பொன்றிடம் செல்லும் யோசனை உங்களிடம் உள்ளதா? அப்படியானால் முதலில் என்ன செய்வீர்கள்?
பதில்: ஆட்சியாளர்கள் எனது வாழ்க்கையை அழிக்க விரும்பினார்கள். எமது அரசியல், நெறிமுறையை  அழிக்கவும் அவர்கள் முயற்சித்தார்கள். எனக்கு இழைக்கப்பட் அநீதி குறித்த விடயத்தை  உலகெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளிடம் கொண்டு செல்வேன். ஆனால் முதலாளித்துவ முறைமையின் கீழ் இயங்கும் எந்த நீதிமன்ற அமைப்பிற்கும் நான் செல்லப்போவதில்லை.
கேள்வி: குடிவரவு, குடியகல்வு சட்டத்தை நீங்கள் மீறியதாக குற்றம்சுமத்தப்படுகிறது. இது தொடர்பாக இங்கு அல்லது நீங்கள் தங்கியிருக்கும் அவுஸ்திரேலியாவில் ஏதாவது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்களா?
பதில்: முதலாளித்துவ சட்டத்தின்கீழ்கூட உயிர்வாழ்வதற்கான உரிமையானது ஏனைய எல்லாவற்றையும்விட மேலானதாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஜனநாயக விரோத ஆட்சியில் அந்த உரிமை ஆபத்துக்குள்ளாகி உள்ளது. இலங்கையில் ஊடகத்துறைக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உயிருக்குப் பயந்த ஊடகவியலாளர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். வேறு சிலர் தமது அடையாளங்களை மறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை ஊடகத்துறைக்கும் அரசியலுக்கும் பொதுவானது.
இலங்கையிலோ வெளிநாட்டிலோ எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக நான் தயார். அத்துடன் மக்களிடம் சென்று எனது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கவும் நான் தயார். சில வருடங்களுக்கு முன்னர் கருணா அம்மானுக்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அரசாங்கம் போலி கடவுச்சீட்டொன்றை பயன்படுத்தியது. அவரை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு அரசாங்கம் கோரப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு வேறு ஒரு சட்டம் இருக்க முடியாது.
கேள்வி: நீங்கள் கடத்தப்பட்டு, பின்னர் பொரளையிலுள்ள கொழும்பு குற்றப் பணியகத்திற்கு அனுப்பப்பட்டவுடன் அங்கு உங்கள் கடவுச்சீட்டை கொண்டுவர அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு எப்படி முடிந்தது?
பதில்: இவை அபத்தாமான குற்றச்சாட்டுகள். எனது கடத்தலின் பின்னர், காணாமல் போன அவுஸ்திரேலிய பிரஜையின் கடவுச்சீட்டு விபரங்களை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகாரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோரியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த எமது கட்சியின் சக செயற்பாட்டாளர்கள், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திடம் எனது கடவுச்சீட்டை ஒப்படைத்தனர். அனைத்து ஆவணங்களையும் எனது கட்சி அங்கத்தவர்களிடம் கொடுத்திருந்தேன். அதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக