வாத, விவாதங்களை கூட கேட்காமல் உடனடியாக நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்துவிட்டார் என்று குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் குற்றம்சாட்டினர்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையை அடுத்த வாரத்தில் ரெகுலர் பெஞ்ச் எடுத்துக்கொள்ளும் என்று கூறிவிட்டு ரத்தினகலா இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள்களில் ஒருவரான அஸ்லம் பாட்சா கூறியதாவது: இந்த வழக்கு விசாரணையை நடத்த மாட்டேன் என்று நீதிபதி கூறியது எங்கள் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரைப் பார்த்த நீதிபதி, நீங்கள்தான் அரசு சார்பில் ஆஜராகப்போகிறீர்களா என்று கேட்டார்.இதற்கு பவானிசிங்கும் ஆம் என்று கூறிவிட்டு, அதற்கான உத்தரவை நீதிபதியிடம் அளித்தார். ஜாமீன் வழங்குவது குறித்து நீங்கள் ஏதும் ஆட்சேபனை செய்ய விரும்புகிறீர்களா என்று நீதிபதி, பவானிசிங்கிடம் கேட்டதற்கு, அவரும் ஆமாம் என்று தெரிவித்தார். ஆட்சேபனை தெரிவிக்க தேவையான கோப்புகளையும் பவானிசிங் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்திருந்தார்.ஆனால், ரத்தினகலாவோ, இந்த வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். நாங்கள் நீதிபதியிடம், எங்கள் தரப்பு வாதத்தை கேளுங்கள் என்று கேட்டோம். ஆனால் நீதிபதி அதை கேட்கவில்லை. நீதிபதியை வழக்கை விசாரிக்குமாறு நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்பதால் இதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் குற்றவாளிகள் ஆகிய இரு தரப்பில் ஒரு தரப்பு வாதத்தை கூட கேட்காமலேயே நீதிபதி கிளம்பிவிட்டார். இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.நீதிபதியின் செயல்பாடுக்கான காரணம் குறித்து கர்நாடக ஹைகோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: இதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. விடுமுறைக்கால நீதிபதி, வாத, பிரதிவாதங்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏதோ மிகவும் அவசரமான வழக்கு, உடனடியாக பைசல் செய்ய முடியும் என்றால் மட்டுமே விடுமுறை கால நீதிபதி அதில் தலையிடுவார்.ஆனால், ஜெயலலிதா வழக்கில், ஜாமீனுக்கு எதிர்ப்பும் இருப்பதால், இரு தரப்பு வாத, பிரதிவாதங்களையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் கால விரையம் ஏற்பட்டு பிற அவசர வழக்குகளை நீதிபதியால் விசாரிக்க முடியாமல்போய்விடும். எனவேதான், ரெகுலர் பெஞ்ச் இதை விசாரிக்கட்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக