15 அக்டோபர் 2014

யாழில் ஐஸ்கிறீம் கடைகளுக்கு சீல்!

யாழ். மாநகர சபைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகவும் அனுமதியின்றியும் இயங்கி வந்த எட்டு ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் சுகாதாரக் குழுவினரிடம் அகப்பட்டுக்கொண்டன. இந்த நிலையங்களில் மறுஅறிவித்தல் வரை ஐஸ்கிறீம் உற்பத்தி செய்வதற்குத் தடைவிதித்துள்ள குழுவினர், அங்கு சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காகக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்கிறீம் வகைகளைக் கைப்பற்றி அழித்துள்ளனர். குடாநாட்டில் வருமானத்தை மட்டும் கருத்திற்கொண்டு சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றியும் ஐஸ்கிறீம் வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் இடம்பெறும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாவனையாளர்களைப் பாதுகாக்க முன்வந்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் 12 சுகாதார வைத்திய அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார். பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய குழுவினர் கடந்த சில நாள்களாக பிரதேச ரீதியாக ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களையும் ஆலயங்கள் உட்பட விற்பனை நிலையங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அவற்றின் தரம் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் யாழ். மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் உற்பத்தி நிலையங்களில் சோதனை மேற்கொண்ட சுகாதாரக் குழுவினர், சுகாதார விதிமுறைகளுக்கு மாறாகவும் அனுமதியின்றியும் இயங்கிவந்த எட்டு ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களைக் கண்டுபிடித்தனர். அத்துடன் மறு அறிவித்தல் வரை ஐஸ்கிறீம் உற்பத்தி செய்வதற்குத் தடையும் விதித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக