24 அக்டோபர் 2011

என் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கியே தீருவேன்"கடாபியின் மகன் சபதம்!

என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று கடாபியின் மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் ஆவேசமாக சபதம் செய்துள்ளார்.
லிபியாவில் சிர்த் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.
அவர்களில் 2 பேர் தங்கள் குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார். முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன் கொல்லப்பட்டார்.
மற்றொரு மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார்.
அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி.யில் திடீரென தோன்றி தனது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அதன்போது, ’’நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன்.
என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது’’ என்று ஆவேசமாக பேசினார்.

யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாதவர்களே துமிந்தவை பார்வையிடவில்லை!

துமிந்த சில்வாவை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துமிந்தவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டமை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர், இது ஓர் மனிதாபிமான அடிப்படையில் நடைபெற்ற சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் துமிந்த தமது அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்ததாகவும்,ஆபத்து ஒன்றில் சிக்கிய போது அவரை பார்வையிடுவதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துமிந்தவை விடவும் பாரதவை தமக்கு நீண்ட காலமாக தெரியும் எனவும், பாரத ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாத பலர் துமிந்தவை சென்று பார்வையிடவில்லை எனவும், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சிலர் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு அமைச்சர்களோ ஏனைய முக்கியஸ்தர்களோ துமிந்தவை ஏன் பார்வையிடச் செல்லவில்லை என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கோதபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தனியார் பாதுகாப்புப் படையினரை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது என நீண்ட காலமாக தாம் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரத படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிழையான கருத்துக்களை மக்கள் முன்னிலையில் எடுத்துச் செல்ல சில தரப்பினர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் இருப்பதாக பாரத முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும், முறைப்பாடு செய்வதற்கு அவருக்கு போதியளவு சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் கோதபாய குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவுடன் தாம் உத்தியோகபூர்வமான உறவுகளை மட்டுமே பேணி வருவதாகவும் அதற்கு அப்பால் எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் சர்வதேச அழுத்தங்களை முறியடிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை எவரும் சரியாக மதிக்கவில்லை எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், கைதிகளை விடுதலை செய்தல், புலிச் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது எனவும் இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் தனித்துவமான இறைமையை வலியுறுத்தவேண்டும்!

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞா்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஐாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லும் நிலையில் அவா்களது பயணம் தொடா்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளா் மகாநாடு ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவா்களில் ஒருவரும் வெளிவிவகாரக்குழு தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களது இல 15 இராணி வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று 23-10-2011 காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.
அந்த மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபபொருளாளர் கிருஸ்ணகுமார் கட்சியின் இளைஞா் அணியின் இணைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனா்.
ஊடகவியலாளா்களுக்கு கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் தமிழ் மக்களால் தமது பிரதி நிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க இராஐாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்து அமெரிக்காவுக்கு அழைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரியதொரு அங்கீகாரம் என்றும் அவ்வாறு அழைக்கப்பட்டமையானது .தமிழ் தரப்பை ஓர் தனித்தரப்பாக அங்கீகரிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
அவ்வாறு அழைக்கப்பட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மனப்பூர்வமா வரவேற்ப்பதுடன் கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கூறினார். கிடைத்துள்ள இச்சந்தர்பத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதாவது தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதனையும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் இடம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி, கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும் என்றும், மேலும்,முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் உயிர் கொடுத்த மக்களது இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் போர்க்குற்றச் சாட்டு விடயங்களை கையாள முற்படக் கூடாது என்றும், முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரான அறுபது ஆண்டுகளிலும் புரியப்பட்ட இனப்படு கொலைகள் தொடர்பாக பூரணமாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் அவர்கள் , சர்வதேச சமூகம் தமிழ் மக்களைப் பயன்படுத்தி சிறீலங்காவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து தமது நலன்களை அடைய முயற்சி செய்யும் இந்த நேரத்தில் தமிழ்த் தரப்பு தமிழ் மக்களது இறைமை சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்களில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அதற்கான அங்கீகாரங்களை தமிழ் மக்கள் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய சூழல் உருவாகும் என்றும் அதனை விளங்கிக் கொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

23 அக்டோபர் 2011

கேர்ணல் கடாபிக்கு இரங்கல் தெரிவித்து மகிந்த குடும்பம் கடிதம்!

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர், கேணல் கடாபியின் மறைவு தொடர்பான தமது இரங்கல் செய்தியையும், தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது மகனான கன்னிபல் கடாபிக்கு தெரிவித்துள்ளனர்.
ஒக்ரோபர் 21,2011 அன்று மிஸ்றற்றாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள மசூதி ஒன்றின் அருகில் உள்ள மரக்கறிச் சந்தையின் அறையொன்றுக்குள் இருந்த மெத்தை மீது லிபிய நாட்டின் பலம்மிக்க ஆட்சியாளரான முகமர் கடாபியின் இறந்த உடல் வைக்கப்பட்டிருந்தது.
கடாபி கொல்லப்பட்டமை தொடர்பாக பல்வேறு குழப்பகரமான சூழல் நிலவுகின்ற போதிலும் கூட, லிபியத் தலைவர்கள் தமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும், ஜனநாயக ஆட்சியை இங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு பாரிய அழுத்தங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கேணல் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவால் கன்னிபல்லுக்கு எழுதப்பட்ட இரங்கல் கடிதத்தின் மூலப் பிரதி வருமாறு:
அன்பிற்குரிய மகன் கன்னிபல்,
தயவுடன் எமது அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது அப்பாவிற்கு என்ன நடந்ததென்பது தொடர்பாக முற்றிலும் நாம் மிகவும் குழப்பமடைந்துள்ளோம்.
சிறிலங்காவில் இது போன்ற சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்த்துள்ளோம். கடந்த வாரம் கூட, எனக்கு நெருக்கமானவர்கள், மற்றும் சில மக்கள் இங்கே கொல்லப்பட்டுள்ளனர்.
எமது நாட்டிலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எல்லா வகையான மக்களையும் பாதுகாக்க முயற்சிப்பதுடன், அவர்களுக்கு நல்லவற்றைச் செய்ய முயற்சிக்கும் போது இவ்வாறான சம்பவங்களை நாம் ஒவ்வொருநாளும் சந்திக்கின்றோம்.
இவ்வாறான நன்றி கெட்ட விதத்தில் எமது நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சம்பவங்களுக்கு மத்தியில் இந்நாட்டைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்வதற்காக நாம் மிகப் பிரயத்தனப்படுகின்றோம். எங்களை விளங்கிக் கொள்ளாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அன்பிற்குரிய கன்னிபல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களது அப்பா பல மில்லியன் கணக்கானவர்களுக்கு கதாநாயகராகவும், மாவீரராகவும் இருந்துள்ளார்.
உங்களது அப்பா அவருடைய நண்பர்களால் எப்போதும் அன்புடனும், நேசிப்புடனும், நன்றியுணர்வுடனும் எப்போதும் நினைவு கூரப்படுவார்.
உங்களது நேசிப்பிற்குரிய தந்தையாரின் இறப்பை நினைவு கூர்ந்து அவருக்கு பிரித் ஓதும் நிகழ்வு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நுகேகொடவில் உள்ள கங்காராம விகாரையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 'அவர் nibbana அடைவார்' என பௌத்தர்களாகிய நாம் சொல்கின்றோம்.
மகனே கன்னிபல், உங்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு ஒரு இடம் தேவைப்படுமானால் தயவு செய்து கொழும்பிற்கு வரவும். நாங்கள் உங்களுக்கு ஒரு அறையைத் தயாராக வைத்துள்ளோம். உங்களது கவலைகளை மறப்பதற்கான பல்வேறு களியாட்ட நிகழ்வுகளை நாம் இங்கு கொண்டிருக்கின்றோம்.
உங்களது அப்பா தனது குடும்பத்தவர்களை எவ்வாறு நேசித்தார் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களது தாயார், சகோதரர்கள், சகோதரிகளுக்கும் தயவுசெய்து எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளவும்.
அவருடைய செவிலிப் பெண்களைப் பராமரிப்பதையும் மறக்க வேண்டாம். உங்களின் தந்தையார் பின்பற்றிய சிலவற்றை தொடர்ந்தும் செய்ய வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.
இவ்வாறான ஒரு கடினமான சூழலில் உங்களையும் உங்களது குடும்பத்தவர்களையும் கடவுள் காத்தருள்வார்.
எந்தவழியில் நீங்கள் இது தொடர்பாகப் பார்த்தாலும் கூட, பிரபாகரன் மற்றும் பின்லேடன் போன்றவர்களின் மரணத்தைப் போன்று சிலிர்க்க வைக்கும் சம்பவமல்ல.
தங்களின் ஏனைய நேசிப்பிற்குரிய குடும்பத்தவர்களான,
மாமா மகி, அன்ரி சிராந்தி, மல்லிலா ( தம்பிகள்)
செய்தி வழிமூலம்: Sri Lanka Guardian

மனோ கணேசனை மசிய வைக்க முடியாதென்று ஜனாதிபதிக்கு நன்கு தெரியும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊன்றுகோளில் நிற்பதைவிட சொந்த காலில் நிற்பது நல்லம் தானே என்று தான் ஜனாதிபதியிடம் கோட்டதாகவும் அதற்கு ஜனாதிபதி சிரித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும், அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்துகூட மனோ கணேஷனை மசியவைக்க முடியாது என்று ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும் என்றும் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் உரையாற்றிய போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக வழக்காம்!

ஹெலிகொப்டர்கள், கடற்படைப் படகுகள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஆறு முக்கிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 811 பேருக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசால் வழக்குத் தொடரப்படவுள்ளதாக தவல்கள் தெவிக்கின்றன.
கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு போன்ற புலிகளின் முக்கிய முகாம்களில் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்களாக கடமையாற்றிய ஆறு பேர் இவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குண்டு மற்றும் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் இவர்களில் அடங்குகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

22 அக்டோபர் 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லையென்பதை ஹேக் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

இன்று, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றில், நெதர்லாந்தின்,ஹேக் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகளை சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்த முடியாது என்று கூறியது.
விடுதலைப் புலிகளுக்கு பணம் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெதர்லாந்து வாசிகளான ஐந்து தமிழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளான இன்று, ”நெதர்லாந்து(டச்சு) சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட முடியாது” எனினும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையானது இவர்கள் மேல் செல்லுபடியாகும் என்பதனால், விடுதலைப் புலிகளுக்காக இவர்கள் பணம் சேர்த்தமை சட்ட விரோதமாகிறது என்று எழுத்து மூலம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும், அச்சுறுத்திப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் ”நிரபராதிகள்” என்று இவர்கள் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், விடுதலைப்புலிகளுக்குப் பணப் பங்களிப்பு செய்யாவிடில் ஊருக்குச் செல்ல முடியாது என்று வன்முறையற்ற வழியில் பலவந்தப்படுத்தி விடுதலைப் புலிகளுக்காகப் பணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு 2 மற்றும் 6 வருட சிறைத் தண்டனையை வழங்கினர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல அது ஒரு விடுதலை இயக்கம் என்று வாதிட்ட இரண்டு பிரதி வாதிகளின் வழக்குரைஞரான விக்டர் கோப், லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியை பதவியிலிருந்து கவிழ்ப்பதற்காகப் போரிட்ட விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள் என்று வாதிட்டார்.
வழங்கப்பட்ட தீர்ப்புப் பற்றிக் கருத்துரைத்த அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கக் கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படையாகும்,” என்றார்.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலால், நேற்று வரை பல தமிழர் விரோத சக்திகள் இவர்களுக்குக் குறைந்த பட்சம் 21 வருட தண்டனை தீர்க்கப்படும் என்று வதந்திகளைப் பரப்பியிருந்தன.
வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தில் குழுமியிருந்த நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது என்று கூறியதுடன் தாம் எதுவித பலவந்தமும் இன்றி மனமுவந்தே இவர்களிடம் பணம் கொடுத்தனர் என்று செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழுக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான முதற்படியாக, இன்று ஹேக் மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பற்றி வங்கிய தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர்.

21 அக்டோபர் 2011

மறுமலர்ச்சி தி.மு.கவிற்கு புதிய மறுமலர்ச்சி!

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.
நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

கே.பி.க்கு நிதி பொறுப்பாளராக இருந்தவரை கைது செய்ய ஸ்ரீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் நிதி பொறுப்பாளராக இருந்த அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜா என்பவரை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டதுடன் அதற்கான சிகப்பு அறிக்கையும் வெளியிட்டார்.
அமெரிக்க பிரஜையான இந்த நபர் ஒரு கணக்காய்வாளர் எனவும் இவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ரியாஸ் பாரி தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக ஆனந்தராஜாவுடன் சேர்த்து குற்றம்சுமத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நீராவியடி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான சுப்ரமணியம் சிவக்குமார் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
2007 ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான கால பகுதியில், அமெரிக்காவிலும் இலங்கையிலும் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்ததாக இலங்கை சட்டமா அதிபர சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டனை பெறக் கூடிய குற்றத்தை செய்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு மீது தருஸ்மான் குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு ஐநா செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு என அக்குழுவின் தலைவர் மர்சுக்கி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆனால் நிபுணர் குழுவை இலங்கை அரசாங்கம் தருஸுமான் குழு என அழைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐநா செயலாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நியமிக்கப்பட்டதால் அதனை நிபுணர் குழு என்றே அழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மர்சுக்கி தருஸுமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐநா நிபுணர் குழு அறிக்கையை இலங்கை தருஸுமன் அறிக்கை என்றே அழைத்து வருகிறது.

20 அக்டோபர் 2011

கே.பியுடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொன்னய்யா செல்வராஜா மற்றும் சுப்பிரமணியம் சிவகுமார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தரவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் 2007ம் ஆண்டு முதல் சுமார் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவருக்கும் எதிராக விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்ற நீதவான் தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

நாம் தமிழீழத்தை மறந்தாலும் அரசு ஞாபகப்படுத்துகிறது!

நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.நாம் அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய வினோ தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:
வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கோரிக்கை விடுத்தே வந்துள்ளோம். இதனை அரசு செவிமடுக்கவில்லை.நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் படையினரும் இன்னும் மறந்துவிடவில்லை.கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர் தலைவன் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் சட்டவிரோதக் கும்பலினால் தாக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரைத் தாக்கியவர்கள் “தமிழீழம் வேண்டுமா?சு என்று கேட்டே தாக்கி உள்ளனர். அப்படியானால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
கடந்த கால வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பாருங்கள். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது என்பதை மறந்து விடக்கூடாது.இது மட்டுமல்ல கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினோம்.எமது அமைதிப் போராட்டத்துக்கு சட்ட பூர்வமான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் பொலிஸார் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். வீதித்தடைகளை ஏற்படுத்தி மக்களை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்தனர்.அமைதி வழிப் போராட்டத்துக்கு தொடர்ந்தும் தடை விதித்தார்களேயானால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்றும் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.அதேவேளை இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் பாரதலக்ஸ்மனின் கொலையையும் அவர்கள் மீது போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பித்திருப்பார்கள் என்று கூறினார் வினோ.

19 அக்டோபர் 2011

ராம் ஜெத்மலானியின் திறமையால் மூவரின் தூக்கு கயிறும் நிச்சயம் அறுபடும்!

சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அங்கு விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க 3 பேர் கொண்ட பெஞ்ச் இன்று மறுத்து விட்டது. இந்த பெஞ்ச் விசாரணைக்கு 3 தமிழர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆட்சேபனை தெரிவித்ததை ஏற்று நீதிபதிகள் இந்த முடிவைத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனவே வழக்கு விசாரணையை சென்னையில் தொடர்நதால் அது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் தூக்குத் தண்டனை குறித்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கே மாற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்று சிங்க்வி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. சிங்க்வி விடுமுறையில் இருப்பதால் 3 பேர் கொண்ட வேறு பெஞ்ச் முன்பு வழக்கு வந்தது.
இதையடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. நீதிபதி சிங்க்வி தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த பெஞ்ச் விசாரிக்கக் கூடாது. தவறான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று வந்துள்ளது என்று கூறினார்.
இதை 3 நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். நீதிபதி சிங்க்வி வந்த பின்னர் அந்த பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னர் ராம்ஜேத்மலானியுடன், இந்த வழக்குக்காக டெல்லிக்குப் போயிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியில் வந்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராம்ஜேத்மலானி அவர்களின் வாதத் திறமையால் மூன்று பேரின் தூக்குக் கயிறும் அறுபடும். அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் முறியடிக்கப்படும் என்றார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை ஆரம்பம்!

அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்திருக்கின்றது. அவுஸ்திரேலியாவின் சமஸ்டிப் பொலிஷார் இந்த விசாரணையினை ஆரம்பித்திருப்பதாக அவுஸ்திரேலியன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
போர்க் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களின் நேரடிச் சாட்சியமான அவுஸ்திரேலியப் பிரஜையான மீனா கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியங்களுடன் விசாரணைகளை சமஸ்டிப் பொலிஸார் முன்னெடுத்துவருவதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச, போர்க்காலத்தில் வெளியுறவுச் செயலராக இருந்த பாலித கோகன தற்போதைய அவுஸ்திரேலியாவிற்கான தூதுவரும் போர்க்காலத்தில் இலங்கைக் கடற்படைத் தளபதியுமான திஸர சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணை இடம்பெற்றுவருவதாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழமைபோல திஸர சமரசிங்க இந்த விசாரணைச் சம்பவத்திற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.

சாந்தன்,முருகன்,பேரறிவாளன் தூக்கு தொடர்பான இன்றைய வழக்கிலும் ராம் ஜெத்மலானி ஆஜரானார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சி.கே. பிரசாத், டத்து ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணை விசயமாகத்தான், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றுள்ளார்.

18 அக்டோபர் 2011

நான் இன்னும் உயிர் வாழ வேண்டுமா?ஆனந்தசங்கரிக்கு ஏற்பட்ட விரக்தி!

காணி அபகரிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 17.10.2011 அன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு ஆனந்த சங்கரி தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மனவேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்டபிறகும் எனது உயிர் பிரிய மாட்டேன் என்கிறதே என்று எனக்;குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது என்றும் கூறினார்.
அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது இன்றைய உண்ணாவிரதம் என்னை 30வருடஙகள் பின்னோக்கிப் பார்க்க வைக்கின்றது. அன்றைய அதிபர் சிறிமாவோ அம்மையார் தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தியபோது இதே வவுனியா நகரசபை மைதானத்திலே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தது எனது நினைவுகளுக்கு வருகின்றது. அன்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் எமது உண்ணாவிரதத்தைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். எம்மினத்துக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து எம்மினத்தவர்களே துரோகம் இழைத்த வரலாறுகள் எம்மிடம் நிறையவே உள்ளன. இன்றும்கூட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஏராளமான மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற காணி உத்தியோகத்தர் ஒருவர் தற்போதைய காணிப்பதிவு முறைமை சிறந்ததென்று ஊடகங்களின் மூலம் தெரிவித்துள்ளார். அவருக்கு நான் ஒன்றை சொல்லி;கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் நீங்கள் தாராளமாக உங்கள் குடும்பத்தினருடன் உங்களது எஞ்சிய வாழ்க்கையை அனுபவியுங்கள். எமது மக்களுக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் உருப்படியான யோசனைகளைச் சொல்லுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்.
கடந்த 30ஆண்டுகால வாழ்க்கையில் எமது மக்கள் இலட்சக்கணக்கில் மடிந்துள்ளனர். இறந்தவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. காணிபூமியுடன் வளமாக வாழ்ந்தவர்கள். அவர்களின் வாரிசுகளுக்கு தங்கள் காணி எங்கிருக்கின்றது என்பதே தெரியாது. அத்துடன் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்து ஓடியவர்கள் தங்களது காணி உறுதிகளைத் தொலைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஓருலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வரவிருக்கின்றனர். அவர்களது காணிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது இந்த அரசாங்கம்? இந்த நேரத்தில் இத்தகைய பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
அரசாங்கம் துரிதகதியில் மேற்கொள்ளும் இத்தகைய செயல் தொடருமானால் எமது இனம் இல்லாமலேயே போய்விடும். இவைகளை எல்லாம் சிந்தித்துத்தான் நாங்கள் அனைவரும் எம்மிடமுள்ள சிறுசிறு வேற்றுமைகளை மறந்து ஓரணியாக அணிதிரண்டு எமது மக்களின் எதிர்ப்பை இன்று அரசாங்கத்திற்குக் காண்பித்திருக்கிறோம்.
இன்று எத்தகைய உயர்பீடத்திலும் தமிழர்கள் இல்லை. முன்பு ஓரளவிற்கு உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்தார்கள். இன்று இலங்கை பொதுநிர்வாகத்திற்கான சோதனையில் ஒரு தமிழரும் சித்தியடையாத நிலைதோன்றியுள்ளது. இந்த நாட்டில் நாம் மனிதர்களாக வாழ்வோமா என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் இத்தகைய செயலைத் தடுத்துநிறுத்த வேண்டும். எனவே இப்பொழுது நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம் அதனை நாம் திடசங்கல்பமாக ஏற்போம் என்று கூறினார்.

மன்னார் அரச அதிபராக சிங்களவர்?

வடக்கில் சிங்களமயமாக்கல் நடவடிக்கையினைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அரசாங்கம் அரச நிர்வாககங்களின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரையிலும் சிங்களவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் துணையுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட சிங்களவர்களை பணிக்கென வடக்கு மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வவுனியா அரச திணைக்களங்களுக்கு மூவர் உயர் பதவிகளுக்காக அனுப்பப்படவிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு அனுப்பப்படுபவர்களில் பெருமளவானவர்கள் பெண்கள் எனத் தெரியவருகிறது.
நிர்வாக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய தமிழ் மாணவர்கள் எவரும் சித்தியடையாத நிலையில் 125 சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர். குறித்த பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போது விரைவில் பரீட்சையினை நடத்தப் போவதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரத்தன வாக்குறுதி அளித்திருந்த நிலையிலும் குறித்த பரீட்சை நடைபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா பொது மருத்துவமனைக்கு சிங்கள இனத்தினைச் சேர்ந்த 18 சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குருநாகல், மாத்தறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றிவருகின்ற வவுனியா மாவட்ட பெண் சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் சிங்களவர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளமையின் பின்னணியில் வடமாகாண ஆளுநர் சந்திசிறீ இருப்பதாக தெரியவருகின்றது.

17 அக்டோபர் 2011

சிங்களப்படை நடத்தும் கொலை வெறியாட்டம்!

எந்த நாட்களில் இவை எடுக்கப்பட்டது எனத் தெரியாவிட்டாலும் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சந்தேகிக்கப்படும் சில புகைப்படங்களை ஆங்கில ஊடம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் போராளி ஒருவரையும் மற்றும் பொதுமக்கள் 6 பேரை இலங்கை இராணுவம் கொலைசெய்து பின்னர் வெட்டிப் புதைக்க முனையும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அப் படத்தை உற்று நோக்கும்போது ஒருவரின் வேட்டியை உருவி ஒரு உடலத்தின் காலில் கட்டி உள்ளனர். அதாவது கொலைசெய்யப்பட முன்னர் அவர் கால்கள் கட்டப்பட்டுள்ளது. இதனைவைத்துப் பார்க்கும்போது இவர்கள் யுத்ததில் இறக்கவில்லை என்பது புலனாகிறது. இவர்கள் சரணடைய வந்தவர்களாகவும் இருக்கலாம்.
இலங்கை இராணுவத்தின் கைகளில் உயிருடன் பிடிபட்ட இவர்களை பின்னர் இராணுவத்தினர் கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுகிறது. சில உடலங்கள் குழிக்குள் கிடக்கும் நிலையைப் பார்த்தால் அவற்றை வெட்டிப் புதைக்க இராணுவம் காத்து நிற்பது போன்றும் உள்ளது. இப் புகைப்படத்தில் 2 பெண்களின் உடலங்களும் காணப்படுகிறது. மேற்படி உடலங்களை கட்டி இழுத்து இவ்விடத்துக்கு கொண்டுவந்திருப்பதற்கான தடையங்களும் இப் புகைப்படத்தில் இருப்பதாக் பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இப் புகைப்படமானது முன்னரே வெளியாகியுள்ள போதும் அதன் தெளிவான மற்றும் பெரிய அளவிலான புகைப்படம் தற்போதே அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றது என்பதனையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியம் காணப்படுவதாக பி.ரி.ஐ.தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நெதர்லாந்து அதிகாரிகள் மற்றும் யூரோபோல் ஆகிய இருதரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போது தமிழீழம் கோரி 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாக அரசாங்கம் நம்பியிருந்தது.
ஆனால் நெதர்லாந்து நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் ஐரோப்பாவில் தற்போதும் தமிழீழக் கோரிக்கை வலுவாகவிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் சட்டவிரோத நிதி சேகரிப்பு, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பயங்கரவாத நிலைகளும் அதன் போக்கும் எனும் தலைப்பில் யூரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வமைப்புக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து நெதர்லாந்து தமிழர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளின் போது ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகமாகவுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கணினியில் இருந்து நிதி தொடர்பிலான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அரச வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தமிழீழத்தை உருவாக்க வேண்டும் எனும் இலட்சியத்தைப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போதும் கொண்டிருப்பதாகவும் இவ்வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னரும் ஐரோப்பாவில் இடம்பெற்று வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைகின்றனரா என்ற ஐயத்தையே நெதர்லாந்து நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ரொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழம் எனும் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ளனர் என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருணாவுடன் கோத்தபாய குத்தாட்டம்,கருணாவை இன்னும் பயன்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிப்பு!

யுத்தம் காரணமாக இருபது வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த இராணுவத்தின் வருடாந்த இராப்போசன நடன விருந்து, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு கண்காணி மற்றும் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பிரிவின் தளபதியாக இருந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துக்கொண்டனர்.
இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளான ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப்பு செயலாளரான முன்னாள் இராணுவ கர்ணல் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே சிவில் உடையில் காணப்பட்டனர்.
30 வருடகால யுத்தத்தில், இராணுவத்தினருடன் நடந்த பயங்கரமான மோதல்களின் போது, எதிரணியில் இருந்த ஆயுதப்படையினருக்கு கட்டளைகளை வழங்கிய கருணா, இராணுவத்தினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த விருந்து உபசாரத்தில் எப்படி கலந்துக்கொள்ள முடியும் என இராணுவத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்து கேள்வி எழுப்பிக்கொண்டனர்.
இதன் காரணமாக இராணுவ தளபதியும் விசனமடைந்துள்ளார்.விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த மேஜர் ஜெனரலான மிலிந்த பீரிஸை அழைத்து, யார் கருணாவுக்கு அழைப்பு விடுத்தது என இராணுவத் தளபதி வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த பீரிஸ், தான் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். கருணா மூலம் எதிர்காலத்தில் பல வேலைகளை செய்துக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர், "இல்லை.. இல்லை.. பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் தான் அவரை வர சென்னோன்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கருணா தரப்பினர் இராணுவ அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கு சென்ற போது, இராணுவத் தளபதி, தனது வெட்கத்தை கதிரை மீது வைத்து விட்டு, கருணாவுக்கு மரியாதை செலுத்தினார். விடுதலைப்புலிகளின் ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் கருணாவை, இராணுவத் தளபதி சேர் என அழைத்ததுடன் பிரதியமைச்சரான கருணா, அரசாங்க அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரை சேர் என விளித்தார்.
இவர்களை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளும், கருணா முன்னிலையில், மரியாதை செலுத்தும் வகையில் காணப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர், கோத்தபாய ராஜபக்ஷ தனது மனைவியுடன் நடனமாடினார். அவரது மனைவி சென்றவுடன் அவர் கருணாவுடன் இணைந்து குத்தாட்டம் ஆடத்துவங்கினார்.
இதனை பார்த்து பொறுத்து கொள்ள முடியாத முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர், சொல்லிக் கொள்ளாமல். விருந்து நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறினர்.