18 அக்டோபர் 2011

மன்னார் அரச அதிபராக சிங்களவர்?

வடக்கில் சிங்களமயமாக்கல் நடவடிக்கையினைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அரசாங்கம் அரச நிர்வாககங்களின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரையிலும் சிங்களவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் துணையுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட சிங்களவர்களை பணிக்கென வடக்கு மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வவுனியா அரச திணைக்களங்களுக்கு மூவர் உயர் பதவிகளுக்காக அனுப்பப்படவிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு அனுப்பப்படுபவர்களில் பெருமளவானவர்கள் பெண்கள் எனத் தெரியவருகிறது.
நிர்வாக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய தமிழ் மாணவர்கள் எவரும் சித்தியடையாத நிலையில் 125 சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர். குறித்த பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போது விரைவில் பரீட்சையினை நடத்தப் போவதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரத்தன வாக்குறுதி அளித்திருந்த நிலையிலும் குறித்த பரீட்சை நடைபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா பொது மருத்துவமனைக்கு சிங்கள இனத்தினைச் சேர்ந்த 18 சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குருநாகல், மாத்தறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றிவருகின்ற வவுனியா மாவட்ட பெண் சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் சிங்களவர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளமையின் பின்னணியில் வடமாகாண ஆளுநர் சந்திசிறீ இருப்பதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக