03 அக்டோபர் 2011

ஸ்ரீலங்கா மீதான சர்வதேச நெருக்கடி இன்னும் அதிகரிக்கும்!

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்ற போர்க் குற்றச்சாட்டுகள் இன்னமும் குற்றச்சாட்டுக்களாகத்தான் இருக்கின்றன. ஆனால் இவை விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள். ஆகையால் இதிலிருந்து அரசாங்கம் தப்பி விட முடியாது. காலம் கடந்தாலும் அதற்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
தற்போது நடைபெறுகின்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் தீர்வை காண வேண்டும். இதில் வெற்றி கிடைக்காவிட்டால் அதுவே சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராக அடுத்துச் செய்ய வேண்டிய செயற்பாடுகளுக்கான அடிப்படையாக அமையும். ஆகையால் இது ஒரு நீண்ட போராட்டமாக உருவெடுக்கலாம். ஏனெனில் பேச்சுவார்த்தையில் உடனடியாக ஒரு தீர்வு வரும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு காரியம் அல்ல. சில இடைக்காலத் தீர்வுகளைக் கூட நாம் ஏற்க வேண்டி வரலாம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நோர்வே அரச பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக விளக்கியபோதே இதனைத் தெரிவித்தார் சுமந்திரன் தெரிவித்த கருத்துகளின் முக்கியமான பகுதிகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றது. அரசாங்கத்துடன் நாம் மேற் கொண்டிருக்கும் இப்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏதாவது தீர்வு ஏற்படுமாக இருந்தால் அதற்கு சர்வதேச நாடுகள் வழங்கி வருகின்ற அழுத்தங்கள் மட்டுமே காரணமாக இருக்கும். ஏனெனில் போரிலே நாங்கள் வென்றுவிட்டோம்.
ஆகையால் இனி இனப்பிரச்சினை என்ற ஒன்று கிடையாது. இதுவரை இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினைதான். அதையும் தீர்த்துவிட்டோம் என்று சொல்கிற அரசாங்கத்தை, இல்லை. இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த அரசியற் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும் என்று சொல்லி வற்புறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வைத்தது வெளியுலக நாடுகள் தான்.எனவே பேச்சுவார்த்தையை மீண்டும் எப்படி அரசாங்கத்தை ஆரம்பிக்க வைத்தோமோ அந்த விதமாக பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிபடைவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறோம்.
நான் இதற்கு முன்னதாக ஜேர்மன் நாட்டின் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள மற்றும் அவர்களது பாராளுமன்றக் குழு ஆகியோரை சந்தித்து உரையாடிவிட்டு நோர்வே வெளியுறவு அமைச்சையும் விசேடமாக அமைச்சர் எரிக் சொல்ஹெய்மையும் சந்தித்து உரையாட வந்துள்ளேன். இலங்கை மீது சர்வதேச அரசகளும் அமைப்புக்களும் பிரயோகித்து வருகின்ற போர்க் குற்ற நெருக்கடிகள்தான் இன்று அரசாங்கத்தை ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட தூண்டியுள்ளது. இந்த நெருக்கடி இன்னும் வலுவடையும் என்பது எமது எதிர்பார்ப்பு. இது மட்டுமல்ல இதைப் போன்று தற்போது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்து செயற்படுத்தப்படுகிற பல வேலைத்திட்டங்கள், காணிப் பறிப்பு எமது மக்களை இன்னும் அடிமைகளாகப் பாவிக்கிற நினைப்பு இராணுவ ஆட்சி போன்ற காரியங்களைக் கூட நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அரசிற்கு அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஆனால் இப்போதுள்ள அரசியல் அமைப்பு சட்டத்தின் படி காணி அதிகாரமும் காவற்றுறை அதிகாரமும் மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டிருக்கிறது. அது நடை முறையிலே கொண்டு வரப்படாது இருந்தாலும் கூட சட்டத்திலே அது இருக்கிறது. 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப் பரவலை நான் செய்வேன் என்று இரு தடவைகள் இந்தியப் பிரதமருடன் சேர்ந்து ஜனாதிபதி கூட்டறிக்கை விட்டிருக்கிறார். எனவே இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு குறைவாக ஒரு தீர்வு வரமுடியாது என்பது எங்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது. அதை விடக் கூடுதலாகத்தான் அதிகாரப் பகிர்வு இருக்கவேண்டும்.
இவ்வாறான உத்தரவாதத்தை ஜனாதிபதியே சர்வதேச சமூகத்திடம் கொடுத்திருக்கின்ற காரணத்தால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இப்போதுள்ளதை விட இன்னும் கூடுதலாக பகிரப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தீர்மானமாக இருந்து அந்த அடிப்படையில் பேசி வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக