01 அக்டோபர் 2011

மோசமான கடந்த காலங்களை நாம் திரும்பிப் பார்க்கக்கூடாது"மகிந்த புத்திமதி!

முன்னாள் போராளிகள் 1,800 பேர் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டனர். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டபின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தெரிவிக்கிறது.
தலைநகர் கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், வெளிநாட்டு ராஜதந்திரிகளின் முன்பாக இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
""இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு பெற்ற பின்னர் இன்று நீங்கள் சுதந்திர புருஷர்களாகவும் பெண்களாகவும் சமூகத்தினுள் மீள இணைந்து கொள்கிறீர்கள்'' என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த தெரிவித்தார்.
விடுவிக்கப்படும் போராளிகளைக் குழப்ப சமூக விரோதச் சக்திகள் முயலக்கூடும் என்று தெரிவித்த அவர், ஆனால், நீங்கள் அமைதிக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமாக உழைப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
மோசமான கடந்த காலங்களை நாங்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. பிரகாசமான எதிர்காலத்தையே நோக்க வேண்டும் என்றார்.
போர் முடிந்ததாக அரசு அறிவித்ததன் பின்னர் படையினரிடம் சரணடைந்தவர்கள் என்று கூறப்படும் 11,000 பேரில் 8,000 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு கூறுகின்றது. எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் இந்தப் புனர்வாழ்வுத் திட்டம் முடிவுக்கு வருகின்றது என்று திட்டத்தை மேற்பார்வை செய்யும் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார்.
நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரே இப்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ள எஞ்சியோர் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக