09 அக்டோபர் 2011

புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களால் ஸ்ரீலங்காவிற்கு பாதிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்ட போதிலும் புலி ஆதரவு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதகாக் குறிப்பிடப்படுகிறது.
வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பாரியளவு பொருட் செலவில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், சில சர்வதேச நாடுகளின் அனுதாபத்தை திரட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களினால் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உலக தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் அணி திரள வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிரவாத அமைப்புக்களுக்கு இடையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாகவும் இதனால் சர்வதேச ரீதியில் கூட்டாக இணைந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக