10 அக்டோபர் 2011

துமிந்தவின் ஆதரவாளர் பாரதலக்ஷ்மன் மீது தாக்குதல் நடத்தினார்!

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர் ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவரது சாரதி தெரிவித்துள்ளார்.
முல்லேரியா வல்பொல சந்தியில் வைத்து இரு தரப்பினரும் சந்தித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பயணம் செய்த வாகனங்களை விட்டு கீழே இறங்கிய இரு தரப்பினரும் முதலில் வாக்குவாதம் செய்ததாகவும் பின்னர் துமிந்த சில்வா, பாரத மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கீழே விழுந்த பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் காலில் துமிந்தவின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பாரதவின் தலையில் சுடுமாறு சத்தமிடப்பட்டதாகவும் பின்னர் சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த பாரதவை ஜீவ் வண்டிக்கு பின்னால் தூக்கிச் செல்ல அவரது மெய்ப்பாதுகாவலர்கள் முயற்சித்தபோது துமிந்தவின் ஆதவரவாளர்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் குறித்த இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் துமிந்த தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பாரத தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன் போதே துமிந்த சில்வாவின் தலையில் காயம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரினதும் ஆதரவாளர்களிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு பாரத கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகமும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் போதைப் பொருள் வர்த்தகர்களை இந்த பிரதேசத்தை விட்டு துரத்தியடிக்கப் போவதாக பாரத தெரிவித்திருந்தார்.
கொலன்னாவ பிரதேசத்தில் பாரத கலந்து கொண்ட இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் போதைப் பொருள் வர்த்தகத்தை வளர விட மாட்டேன் என அவர் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக