28 அக்டோபர் 2011

மகிந்தவை முக்கியப்படுத்தி சுற்றி சுழலும் ஊடகங்கள்!

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த உச்சிமாநாட்டை முன்னிட்டு பல்வேறு அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீதே ஊடகங்களின் கண் பதிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக கொமன்வெல்த் அமர்வுகளில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மீதே ஊடகங்களின் கண் இருக்கும்.
ஆனால் இம்முறை போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, பிரித்தானிய மகாராணிக்கு இணையாக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இதற்கு முன்னர் சிறிலங்காவுக்கு இத்தகைய ஊடக முக்கியத்துவம் கொமன்வெல்த் அமர்வுகளிலோ, பிராந்திய நாடுகளின் அமர்வுகளிலோ கிடைத்ததில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியர் சமிந்திர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்காவையும், மகிந்த ராஜபக்சவும் அனைத்துலக ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சிறிலங்கா விவகாரத்தை குறிப்பாக போர்க்குற்ற விவகாரத்தை, அவுஸ்ரேலிய ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கோணங்களில் அலசி வருகின்றன.
அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை அவுஸ்ரேலியா அரசு தடுத்ததும் அங்கு விமர்சனங்களை தோற்றிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுக்கு எதிராக மென்போக்குடன் நடந்து கொள்வதாக அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள், முன்னாள் இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
‘தி வெஸ்ரேர்ன் ஒஸ்ரேலியன்‘ ஊடகத்தில் “சிறிலங்கா மூலம் பரிசோதிக்கப்படும் கொமன்வெல்த்தின் பெறுமானம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் செற்றி, கொமன்வெல்த்தின் ஒருபகுதி நாடுகள் சிறிலங்கா விவகாரத்தில் குருட்டுக் கண்ணுடன் செயற்படுவதாக குற்றம்சாட்டிள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக