27 அக்டோபர் 2011

மக்களின் செயற்பாடுகளில் சிங்களப்படைகள் குறுக்கீடு செய்வதை நேரில் பார்த்தேன்"

நாங்கள் சில இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். பொதுமக்களின் செயற்பாடுகள் சிலவற்றில் இராணுவ வீரர்கள் குறுக்கீடு செய்வதைப் பார்த்த போது நாங்கள் மிகவும் குழப்பமுற்றோம்.
இவ்வாறு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட Journal of Foreign Relations என்னும் ஊடகத்தில் Gibson Bateman எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் தலைமை தாங்கப்படும் போருக்குப் பிந்திய சிறிலங்காவானது சோகம் நிறைந்த இடமாக உள்ளது.
மே 2009 ல், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா அரசாங்கம் பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இதில் புலிகளின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர்.
சிறிலங்கா அரசிற்கு எதிராக பிறிதொரு தமிழ்த் தேசிய அமைப்பானது ஆயுதத்தைத் தூக்குவதென்பது மிகக் கடினமான செயலாகும் என எதிர்வுகூறப்படுகின்றது. ஆனால், தற்போதும் சிறிலங்காவில் வசிக்கும் ஒருவர் அங்கே யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவே கருதுவார்.
போருக்குப் பிந்திய சிறிலங்காவின் சில இடங்கள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளை அழித்ததன் மூலம் இராணுவ வீரர்கள் யுத்தக் கதாநாயகர்களாகக் கருதப்படுகின்ற சிங்களவர்கள் செறிந்து வாழும் சிறிலங்காவின் தெற்குப் பகுதியில் இராணுவ நடமாட்டங்கள் குறைவாகவே உள்ளன.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையைக் கொண்டுள்ளனர். முன்னர் புலிகளின் பலம்மிக்க அரண்களாக விளங்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகள் தற்போது முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதானது அந்த மக்களைக் குழப்புவதாக உள்ளது.
இந்த மக்களின் ஒட்டு மொத்த வாழ்வில் நாட்டின் பாதுகாப்புப் படைவீரர்கள் தமது செல்வாக்குகளைச் செலுத்துகின்றனர்.
சிறிலங்காவில் தற்போது அதிகம் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பான புள்ளிவிபரங்கள் எங்கும் கிடைக்கப்பெறவில்லை.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்கள இராணுவப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் மக்கள் குறிப்பாக போர்க் காலத்தில் தமது கணவன்மாரை இழந்து தனித்து வாழும் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடன் வாழ்வைக் கழிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏ-09 நெடுஞ்சாலை வழியாக நானும் எனது நண்பர் ஒருவரும் சென்றுகொண்டிருந்தோம்.
அந்தப் பகுதி முழுதும் இராணுவ வீரர்களால் நிறைந்திருந்தது. நாங்கள் சில இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். பொதுமக்களின் செயற்பாடுகள் சிலவற்றில் இராணுவ வீரர்கள் குறுக்கீடு செய்வதைப் பார்த்த போது நாங்கள் மிகவும் குழப்பமுற்றோம்.
நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அவ்வீதியின் அருகிலிருந்த உணவகத்தில் கோப்பி அருந்துவதற்காகச் சென்றோம். அது சிறிலங்கா இராணுவத்தின் உணவகமாகும். அந்த உணவகத்தில் நாம் கேட்டவற்றை இராணுவ வீரர் ஒருவர் பரிமாறினார். இது எமக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்கப்படும் பல்வேறு வகையான கடைகளில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுவதை நாம் பார்த்தோம். அத்துடன் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட விடயத்திலும் சிறிலங்கா இராணுவத்தினர் தலையீடு செய்வதை நான் வாசித்து அறிந்துள்ளேன. இவ்வாறான விடயங்கள் நியாயமற்றவையாகும்.
யுத்தம் முடிவுற்றுவிட்டது. ஏற்கனவே தமது கௌரவத்தை இழந்து வாழும் தமிழ் மக்கள், தற்போது இராணுவ மயப்படுத்தப்பட்ட நிழல் நிர்வாகத்தின் கீழ் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறிலங்காவின் வடக்குக் கிழக்கில் கடந்த யூலை மாதத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் மகிழ்ச்சியற்ற வாழ்வைக் கொண்டுள்ளனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவர்களுக்கென சிறிய ஆதரவுகள் உண்டு.
இதேவேளை சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் பல அபிவிருத்தி, மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது பெரிய விவகாரம் அல்ல. ஏனெனில் இங்கு வாழும் தமிழ் மக்கள் இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில் இவ்வாறான துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மூலம் தாம் தமிழ் மக்களில் மிகவும் அக்கறையுடன் உள்ளதை உலக நாடுகளிற்குக் காட்டுவதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் போருக்குப் பிந்திய அபிவிருத்தித் திட்டங்களைவ வடக்குக் கிழக்கில் மேற்கொள்கின்றனர்.
தமிழ் மக்கள் தமக்கான அரசியற் தீர்வையே விரும்புகின்றார்கள். நீதியான, நேர்மையான முறையில் தமக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.
தாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமது தாயக பூமியில் இரண்டாந்தர மக்களாகத் தாம் நடாத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதையே அந்த மக்கள் விரும்புகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை வழங்குவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் ராஜபக்ச அரசாங்கம் இன்னமும் மேற்கொள்ளவில்லை.
நீண்ட கால யுத்தத்தை நிறைவு செய்து தற்போது வேலையற்றவர்களாகவுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான இளையோர்களை வைத்திருப்பதையே ராஜபக்ச அரசாங்கம் விரும்புகின்றது. இது குற்றச் செயல்கள் மற்றும் குழப்பநிலைகள் அதிகரிப்பதற்குக் காலாக உள்ளது. ஆனால் இராணுவ வீரர்களின் குறைப்பதானது எவ்வாறான நன்மையைத் தரும் என்பதைக் கூட ராஜபக்ச அரசாங்கம் தனது கவனத்தில் எடுக்கவில்லை.
துரதிஸ்டவசமாக, இவ் இராணுவமயப்படுத்தலானது பூகோள அரசியல் பொருளாதாரத்திற்கு சிறிது நன்மையைத் தந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் இராணுவ மயப்படுதுதப்பட்ட சிறிலங்காவைத் தமது பூகோள அரசியல் பொருளாதாரம் தொடர்பாகக் கவனம் எடுக்கவில்லை.
இதேபோல் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையாக அனைத்துலக சமூகத்திடமிருந்து சுதந்திரமான விசாரணை ஒன்று மேற்கொள்வதற்கான அழுத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான அழுத்தத்தின் மூலம் தமிழ் மக்களிற்கான ஒரு அரசியற் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றே இந்நாடுகள் கருதுகின்றன.
இவை தவிர, சிறிலங்காவுடன் அமெரிக்கா முழுமையான இராணுவ உறவொன்றைப் பலப்படுத்திக் கொள்ளுமாறு பென்ரகன் வலியுறுத்தி வருவது தெரிந்ததே. தேவையற்ற விதத்தில் சிறிலங்காவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவமயமாக்கலானது, சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் செயற்படும் மனித உரிமைக் குழுக்கள் இது தொடர்பாகப் போதியளவு எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்பதையே குறிக்கின்றது.
முதலில் சில விடயற்களை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக, சிறிலங்கா அரசாங்கம் பெரும்பாலான ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, சிறிலங்காவில் மனித உரிமைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி குறைவாக உள்ளமையாகும்.
மனித உரிமையைப் பாதுகாப்பவர்கள் துணிச்சலுள்ளவர்களாக இருந்தால், சிறிலங்காவில் உள்ள இராணுவமயப்படுத்தல் செயற்பாடானது ஆபத்து மிக்கதாகும் என்பதை வெளிப்படையாகக் கூறலாம். மீண்டும் மக்கள் அச்சமுறுவதும், பயங்கொள்வதும் மிகச் சக்திவாய்ந்ததொரு விடயமாகும். இறுதியாகக் குறிப்பிட்ட விடயத்தை பரந்துபட்ட பூகோள அரசியற் போக்குடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனது விமர்சனங்களை அறிவித்துள்ள போதிலும், இதன் உறுப்புநாடுகளில் பல 2005 ல் மகிந்த ராஜபக்ச முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை விநயோகித்து வருகின்றன.
கடந்த பல பத்தாண்டுகளாக சிறிலங்காவின் மிகப் பெரிய ஆயுத வழங்குனராகச் செயற்பட்டு வரும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளின் ஆயுத விநயோகம் மிகக் குறைவானதாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தவில்லை. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அமெரிக்கா, சிறிலங்காவிற்கு தனது ஆயுதங்களை வழங்கியிருந்தது. அத்துடன் இனிவருங் காலங்களிலும், அமெரிக்கா, சிறிலங்காவுடன் ஆயுதப் பேரம் பேசுவதில் ஈடுபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கதே.
மேற்கூறிய காரணங்களை சீர்தூக்கிப் பார்க்கும் போது சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்தல் அல்லது இராணுவ ஒதுக்கீட்டைக் குறைத்தல் என்பது எதிர்காலத்தில் சாத்தியமாகாது தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக