04 அக்டோபர் 2011

இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் விரைவில் வரும்!

இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என எதிர்வுகூறி இருக்கிறார் கனேடிய பழமைபேண் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் பிரவுண்.
உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் பக்கம் திரும்புகின்றனர் என்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம். வரலாறு மீண்டும் சுழன்று ஜனநாயகத்தின் பக்கம் வருகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என்றார் அவர்.
கனேடிய நாடாளுமன்றத்தில் மனிதவுரிமை கண்காணிப்பகத்துடன் இணைந்து சிறிலங்காவின் கொலைக்களம் விவரணத்தைத் திரையிட்டவர் பிரவுண். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தர இவர் முயன்றவேளை அவருக்கு விஸா தர கொழும்பு அரசு மறுத்துவிட்டது.
கனடிய மனிதவுரிமை மையத்துடன் நடந்த சந்திப்பில், இலங்கை தொடர்பான தனது அனுபவங்களை பிரவுண் பகிர்ந்து கொண்டார். 2009இல் இலங்கைக்குப் பயணம் செய்ய நான் முயன்றதில் இருந்து கொழும்புவின் வரம்பு மீறிய அழுத்தத்தைச் சந்தித்து வருகிறேன். எனினும் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அளவுக்கு இங்குள்ள இலங்கைத் தூதரகம் எனக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது என்றார்.
இலங்கை அரசு ஏதோ ஒன்றை மறைப்பதால் தான் இவ்வாறு தனக்கு மிரட்டல்களை விடுகிறது என்பதைத் தான் உணர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.தான் சார்ந்திருக்கும் கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்கா விவகாரத்தில் மிகவும் அழுத்தமான நடவடிக்கைகளை எடுப்பதையிட்டு தான் மிகவும் சந்தோசமடைவதாகவும், கனேடியப் பிரதமர் காப்பர், “மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் காணாவிட்டால் 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டு கொழும்பில் நடைபெற்றால் கலந்து கொள்ளப்போவதில்லை” என்று தெரிவித்தது மிகவும் சக்திவாய்ந்த ஒரு எச்சரிக்கை என்று தான் கருதுகிறார் எனவும் பற்றிக் பிரவுண் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக