10 அக்டோபர் 2011

தேர்தல் திணைக்களம் குழம்பவில்லை,இணையங்கள்தான் குழம்பியுள்ளன!

இலங்கையின் தேர்தல் சட்டங்களும் நடைமுறைகளும் அறவே தெரியாத சில தமிழ் இணையத்தளங்கள் தேர்தல் திணைக்களம் விருப்பு வாக்கில் குழப்பமான முடிவை அறிவித்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு தமிழ் இணையத்தளம் ஆரம்பத்தில் அச்செய்தியை வெளியிட அதை அறியாத வேறு சில இணையத்தளங்களும் அதனை அப்படியே பிரதிபண்ணி செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளுராட்சி தேர்தல் முறைபற்றி சாதாரண மக்கள் அறிந்து வைத்திருப்பது கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான் பரிதாபத்துக்குரிய விடயம்.
கொழும்பு மாநகரசபை தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் கிடைத்த மொத்த வாக்குகள் 26,229 மட்டுமேயாகும். ஆனால் ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனுக்கு 28,433 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இந்த தமிழ் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
தேர்தல் திணைக்களம் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ் இணையத்தளங்களை நடத்துபவர்களுக்குதான் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு முறை விளங்காது வாசகர்களை குழப்பியிருக்கிறார்கள். உள்ளுராட்சி தேர்தல் சட்டத்தில் ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மூன்று வாக்குகளை அளிக்கலாம் என்ற விடயம் தெரியாததால் இந்த தமிழ் இணையத்தளங்கள் தேர்தல் திணைக்களம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் 26229 வாக்குகள் கிடைத்திருந்தால் மனோ கணேசனுக்கு 50ஆயிரம் விருப்பு வாக்குகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மூன்று வாக்குகளையும் அளிக்கலாம்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் அப்படி அல்ல. ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும்தான் வழங்க முடியும். விரும்பினால் ஏனைய வேட்பாளர்களுக்கும் ஒவ்வொரு வாக்கை வழங்கலாம். குழப்புவது தேர்தல் திணைக்களம் அல்ல- விடயம் தெரியாமல் குழம்பி நிற்பது தமிழ் இணைத்தளங்கள் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக