சரத் பொன்சேகா கூறியதாக வெளியிடப்பட்ட வெள்ளைக்கொடி செய்தி இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பொய்யென உறுதி செய்யப்படுவதாகச் சட்டமா அதிபர் கொழும்பு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்துள்ளார்.
முறைப்பாடு ஒன்று முன் வைக்கப்பட்டுக் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் குறித்த கூற்றை நீதி மன்றுக்குத் தெரியப்படுத்துவதாக அரச பிரதி வழக்கறிஞர் புவனகே அளுவிகார தெரிவித்துள்ளார்.
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படவில்லை என யுத்தகாலத்தில் 58-வது படையணியின் தளபதியாக விருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சாட்சியமளித்துள்ளார் என புவனகே அளுவிகார சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேபோன்று சரணடைய வரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்துமாறு தான் ஆலோசனை வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அளித்த சாட்சியத்தையும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் சாட்சியமளித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய ஆகியோரின் சாட்சியம் பயனற்றதாகக் காணப்படுவதாகவும் புவனகே அளுவிகார கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகள் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கொடியுடன் சரணடைய சென்ற அரசியற்துறை பொறுப்பாளர் நடேசன்,சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உட்பட பெருமளவானவர்கள் சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக