30 அக்டோபர் 2011

மூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா?என சீமான் கேள்வி.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.
3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.
அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக