31 அக்டோபர் 2011

திருமலையில் தந்தை செல்வா சிலை உடைப்பு!மனோ கண்டனம்,தமிழரசுக் கட்சி மெளனம்.

திருக்கோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி நேற்று இரவு உடைத்து சேதமாக்கப்பட்டிருப்பதாக திருகோணமலையிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து மலையக மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ள போதிலும் தமிழரசுக்கட்சி, தந்தை செல்வா என அரசியலுக்காக புகழ்பாடுகின்ற தமிழரசுக்கட்சியினர் எவரும் வாய் திறக்காமை தந்தை செல்வாவை ஆழமாக நேசித்த மக்கள் மத்தியில் விசனத்தினைத் தோற்றுவித்துள்ளது.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் அமெரிகாவிற்கான முக்கிய பயணத்தினை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் தமிழரசுக்கட்சியினை நிர்வகிக்கின்ற பேராசிரியர் சிற்றம்பலம், சீ.வி.கே சிவஞானம், குலநாயகம் உட்பட்டவர்களும் கூட்டமைப்பில் தம்மை தமிழரசுக்கட்சி என அடையாளப் படுத்திக் கொள்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் செய்தி தரவேற்றம் செய்யப்படும் வரையில் எந்த ஊடகத்திற்கும் தகவல் வழங்கியிருப்பதாகத் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனோகணேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:-
அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்
தந்தை செல்வா, தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராகும். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். ஈழத்து காந்தி என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களை, இலங்கையில் வாழ்கின்ற எல்லாத் தரப்பு தமிழ் மக்களும் தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டு, போற்றி வணங்குகின்றார்கள்.
இன்று ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் பல்வேறு பேரினவாத அனர்த்தங்களைப்பற்றி தந்தை செல்வா அன்றே தீர்க்கதரிசனமாக எடுத்துக்கூறியிருக்கின்றார். இத்தகைய உன்னதமான தலைவரின் சிலை இன்று திருக்கோணமலையிலே உடைக்கப்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் சாத்வீக சிந்தனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வடகிழக்கில் சமீபகாலமாக திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழனத்தின் அனைத்து பரிமாணங்களையும் அழிக்கும் முயற்சிகளை இந்த அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தூண்டிவிடுகின்றது.
இத்தகைய பேரினவாத போக்கின் கடைசி வெளிப்பாடுதான் இந்த காட்டுமிராண்டி செயலாகும். இத்தகைய பேரினவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது சாத்வீக போராட்டத்தை தந்தை செல்வா வழியில் உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும் என்பதையே இத்தகைய சம்பவங்கள் வலியுறுத்தி நிற்கின்றன. எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக