27 அக்டோபர் 2011

அமெரிக்கா சென்றடைந்துள்ள கூட்டமைப்பினர் ஹிலாரி கிளின்டனையும் சந்திப்பர்.

அமெரிக்கா சென்றடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு) வாஷிங்டனில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு நேற்றுமுன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாஷிங்டனைச் சென்றடைந்தது. இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அமெரிக்க நேரப்படி நேற்றுக் காலை 9.20 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 9.50 மணிக்கு) தமிழ்க் கூட்டமைப்பின் குழுவினர் சென்றனர். அவர்களை அங்கு இராஜாங்கத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் வரவேற்றதாகத் தெரியவருகிறது.
அமெரிக்க உயர்அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு நேற்று அமெரிக்க நேரப்படி சரியாகக் காலை 9.30 மணிக்கு இராஜாங்கத் திணைக்களத்தில் ஆரம்பமா கியதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரி வித்தன.அமெரிக்காவில் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற் கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று இடம் பெற்ற முதலாவது சந்திப்பு யாருடன் நடைபெற்றது என்பது குறித்து உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் அவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கை நேற்றுச் சந்தித்ததாக செய்திகள் தெரிவித்தன.
கூட்டமைப்பினரின் இந்த முதலாவது சந்திப்புடன் அமெரிக்கத் தரப்புக்களுடனான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் யார் யாரை எப்பொழுது எந்த நாளில் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர் என்பது குறித்து தகவல்களை முன்கூட்டியே அறிய முடியாத நிலை உள்ளதாகவும் தமிழ்க் கூட்டமைப்பினருடனான சந்திப்பு அட்டவணை விவரங்கள் அனைத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மிகவும் இரகசியமாகக் கையாள்வதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
எனினும் கூட்டமைப்பினர் இந்த விஜயத்தின்போது ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்டன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது எனவும் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக