30 அக்டோபர் 2011

அனைத்துலக ஆதரவு கோரி கனடாவில் அணி திரண்ட தமிழ் மக்கள்.

கனடாவின் ரொரன்ரோ நகரில் நேற்றுமாலை சுமார் 5000 தமிழர்கள் பங்கேற்ற தமிழர் சுதந்திரப் பேரணி இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு காரணமான சிறிலங்கா அரசாங்கத்தைக் கூண்டில் ஏற்ற வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணியில் கனடாவில் வாழும் சுமார் 5000 தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.
குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்தப் பேரணியில் இந்தப் பேரணியில் ரொரன்ரோ மற்றும் யோர்க் பிராந்திய தொழிலாளர் சபையின் ஜோன் காட்ரைட், லிபரல் பன்முக கலாசார விமர்சகர் ஜிம் கரஜியானிஸ் ஆகியோரும் கலந்து கொண்டு கனேடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான கொள்கையை கடுமையாக விமர்சித்தனர்.
“சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், போரின் கடைசி நான்கு மாதங்களில் மட்டும் 40,000 தொடக்கம் 75,000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கனேடிய தமிழர் தேசிய சபையின் பேச்சாளர் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இறுதியான அரசியல் தீர்வு ஒன்றையே தாம் எதிர்பார்ப்பதாகவும், இல்லையேல் மீண்டும் போர் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு ஒரு இலட்சம் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் தமது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கனேடியத் தமிழர் தேசிய சபை குற்றம்சாட்டியுள்ளது.
அமைதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு சிறிலங்கா அரசுக்கு கனேடியத் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருவதாகவும் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் பலரும் தமிழீழ மற்றும் கனேடியத் தேசியக் கொடிகளை தாங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக