24 அக்டோபர் 2011

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் வாள் வெட்டு!

நடுக்கடலில் தமிழக மீனவரை அரிவாளால் வெட்டி இலங்கை மீனவர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடியிலிருந்து நேற்று முன்தினம் அர்ச்சுனன், விஜயபாலன், விக்னேஷ், கந்தன் ஆகிய 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க ஒரு படகில் சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டு நேற்று காலை கரைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் அவர்களை 2 படகில் வந்த 8 இலங்கை மீனவர்கள் வழிமறித்தனர். தமிழக மீனவர்களின் படகில் ஏறி, இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் இங்கு வந்தாய் என்று கூறி அர்ச்சுனனை அரிவாளால் வெட்டினர். அவர் தடுத்ததில் 2 கைகளிலும் வெட்டு பலமாக விழுந்தது.
வேதனையில் அவர் அலறி துடித்தார். இதைக்கண்டு பதறிய மற்ற 3 மீனவர்களையும் கயிறு, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இனி இந்த பக்கமே வரக்கூடாது என்று விரட்டியுள்ளனர். படுகாயமடைந்த 4 மீனவர்களும் ஆறுகாட்டுத்துறை கடற்பகுதிக்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் காயம்பட்ட நிலையில் மீனவர்களால் கரைக்கு வந்து சேரமுடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் ஒரு படகில் சென்று 4 பேரையும் மீட்டு வந்தனர். பின்னர் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக