15 அக்டோபர் 2011

வல்வெட்டித்துறையில் புத்தவிகாரை தடுக்குமாறு சிவாஜிலிங்கம் வேண்டுகோள்!

வல்வெட்டித்துறை நகரப்பகுதியினில் படைத்தரப்பால் அமைக்கப்பட்டுவரும் புதிய விகாரைக்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் வத்திக்கானுக்கு அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
வரலாற்றுப்பெருமை மிக்கதும் மூன்று நூற்றாண்டுகளை கடந்ததுமான வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் தேவாலயத்தின் முன்பதாகவே இவ்விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒரிரு தினங்களாக படையினர் முழுவீச்சினில் இந்நிர்மாணப் பணிகளினில் ஈடுபட்டுவருகின்ற நிலையிலேயே கே.சிவாஜிலிங்கம் வத்திக்கானுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்டது முதல் வல்வெட்டித்தறை சந்தியிலுளள பொதுமக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக்கள் பலவற்றையும் ஆக்கிரமித்து படையினர் முகாமிட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு கூறி இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதும் இம்முகாம்கள் எவற்றையும் மூடிவிட படைத்தரப்பு மறுத்தே வருகின்றது.
யாழ்-பருத்தித்துறை வீதி பருத்தித்துறை-தொண்டமனாறு வீதி ஆகியவை சந்திக்கும் வல்வெட்டித்துறை சந்தியினிலேயே படையினர் முகாமிட்டுள்ளனர். இம்முகாமினுள் ஏற்கனவே விகாரை ஒன்றை அமைத்திருக்கும் படையினர் தற்போது முகாமிற்கு வெளியே புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பதாக வீதியோரமாக மற்றொரு விகாரையொன்றினை அமைத்து வருகின்றனர். திட்டமிட்ட வகையினில் அமைக்கப்பட்டுவரும் இவ்விகாரைக்கே கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
இவ்விகாரை அமைப்பு வேலைகளை தடுத்து நிறுத்துமாறு வல்வெட்டித்தறை நகர சபை தலைவரிடமும் யாழ்.ஆயர் அதி வண தோமஸ் சௌந்திரநாயகத்திடமும் நாளை நேரில் சந்தித்து வேண்டுகோள்களை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். குறிப்பாக வல்வெட்டித்தறை நகர சபை விகாரைக்கான கட்டுமானப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக