29 அக்டோபர் 2011

தமிழீழ தேசியத்தலைவர் முற்றுகையிலிருந்து தப்பித்தால் தாம் தேடிப்பிடித்து தருவதாக கோத்தாவுக்கு உறுதியளித்தாராம் பிளேக்!

தமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரன் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பிச் சென்றால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009 ஏப்ரல் 15ம் நாள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், றொபேட் ஓ பிளேக்கிற்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பாக இந்த தகவல் பிரமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்னதாக இந்தத் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள் சிறிலங்காப் படையினரின் முற்றுகைக்குள் முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த நிலையில அவர் அங்கிருந்து தப்பிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பி சிறிலங்காவை விட்டு வெளியே சென்றிருந்தால் அவரைத் தேடிப் பிடித்துத் தர உதவுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் றொபேட் ஓ பிளேக்.
அத்துடன் விடுதலைப் புலிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக இந்தச் சந்திப்பில் கோத்தாபய ராஜபக்ச கூறியதாகவும், விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
அதனை பகிரங்கமாக அறிவிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்றும், சிங்கள தேசியவாத சக்திகள் அதனை எதிர்க்கும் என்பதால் அவ்வாறு பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியதாகவும் அமெரிக்கத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக