14 அக்டோபர் 2011

புலிகளிடம் பணம் பெற்றுகொண்டு சில ஊடகங்கள் எமக்கு பிடியாணையை அனுப்புகின்றன என்கிறார் மகிந்த!

புலிகளிடம் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகள் ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக எனக்குப் பிடியாணை அனுப்பப்படுகிறது. இறுதிப் போரில் பெருமளவில் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதை ஏற்க முடியாது. சிவிலியன்களை நாம் கொல்வதாக இருந்தால், இறுதிநேரத்தில் எவ்வாறு ஒன்றரை இலட்சம் சிவிலியன்கள் பாதுகாப்பாக எமது பக்கம் வந்திருப்பார்கள்? இவ்வாறு நேற்று கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
பத்திரிகை ஆசிரியர்களை நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்தபோதே மகிந்த மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இறுதிச் சண்டையின்போது நாம் மனிதாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். சிலர் இதையும் தவறு என்கின்றனர். இது தவறு என்றால், அதனையும் நாம் ஏற்கிறோம். சிவிலியன்கள் உயிரிழப்புகள் குறித்து எம்மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்கமுடியாது.
புலிகளுடன் இணைந்து சண்டையில் ஈடுபட்ட ரமேஷின் மனைவியே எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சிவிலியன்களை நாம் கொன்றிருந்தால் ஒன்றரை இலட்சம் பேர் எமது பக்கத்திற்கு வருவார்களா?.இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எமது தரப்பிலிருந்து இப்போது பதிலளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் ஊடகங்கள் ஊடாகத்தான் எமக்குப் பிடியாணை அனுப்புகின்றனர். எமது கையில் கொடுக்காமல் இவற்றை பத்திரிகைகளின் ஊடாக அனுப்புகின்றனர். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகளே இவ்வாறான பிடியாணைகளை அனுப்புகின்றன என்றார் மகிந்த ராஜபக்ஷ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக