24 அக்டோபர் 2011

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் தனித்துவமான இறைமையை வலியுறுத்தவேண்டும்!

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞா்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஐாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லும் நிலையில் அவா்களது பயணம் தொடா்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளா் மகாநாடு ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவா்களில் ஒருவரும் வெளிவிவகாரக்குழு தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களது இல 15 இராணி வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று 23-10-2011 காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.
அந்த மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபபொருளாளர் கிருஸ்ணகுமார் கட்சியின் இளைஞா் அணியின் இணைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனா்.
ஊடகவியலாளா்களுக்கு கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் தமிழ் மக்களால் தமது பிரதி நிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க இராஐாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்து அமெரிக்காவுக்கு அழைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரியதொரு அங்கீகாரம் என்றும் அவ்வாறு அழைக்கப்பட்டமையானது .தமிழ் தரப்பை ஓர் தனித்தரப்பாக அங்கீகரிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
அவ்வாறு அழைக்கப்பட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மனப்பூர்வமா வரவேற்ப்பதுடன் கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கூறினார். கிடைத்துள்ள இச்சந்தர்பத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதாவது தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதனையும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் இடம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி, கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும் என்றும், மேலும்,முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் உயிர் கொடுத்த மக்களது இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் போர்க்குற்றச் சாட்டு விடயங்களை கையாள முற்படக் கூடாது என்றும், முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரான அறுபது ஆண்டுகளிலும் புரியப்பட்ட இனப்படு கொலைகள் தொடர்பாக பூரணமாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் அவர்கள் , சர்வதேச சமூகம் தமிழ் மக்களைப் பயன்படுத்தி சிறீலங்காவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து தமது நலன்களை அடைய முயற்சி செய்யும் இந்த நேரத்தில் தமிழ்த் தரப்பு தமிழ் மக்களது இறைமை சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்களில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அதற்கான அங்கீகாரங்களை தமிழ் மக்கள் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய சூழல் உருவாகும் என்றும் அதனை விளங்கிக் கொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக