இலங்கை, சர்வதேச நாடுகளை வெற்றிகொள்ள முடியாவிட்டால் ஜெனிவா மனித உரிமை சவால்களை எங்களால் எதிர் கொள்ள முடியாது போகும். இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை செய்துள்ளார். காலநிலையை எவ்வாறு கணிக்க முடியாதுள்ளதோ அதேபோன்று எமது நாட்டின் முன்னுள்ள சர்வதேசத்தின் சவால்களை எங்களால் கணிக்க முடியாதென்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை அரசு சர்வதேசத்தைச் சரியான முறையில் வெற்றி கொள்ளாவிட்டால் இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் முடிபுகள் வேறு விதமாக அமையலாம். மேற்குலக நாடுகளில் பரந்து காணப்படுகின்ற தமிழ் புலம்பெயர் சமூகம் இலங்கை தொடர்பான தவறான கருத்துகளையும் பரப்பி வருகின்றது. முதலில் இதனையே முறியடிக்க வேண்டும். இதுவரையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு வருகின்றது. ஏராளமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட புலிகள் புனர்வாழ்வு பெற்று விடுதலை அடைந்துள்ளனர். அரசியல் தீர்விற்குப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே நாட்டின் முன்னெடுப்புகள் பற்றி சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாகச் சர்வதேச நாடுகளை வெற்றி கொள்வது அவசியமாகும். ஏனெனில் எமக்கு எதிராகச் செயற்படும் நாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமை அமர்வைக் குறிவைத்துத் திட்டங்களை வகுத்துவருகின்றன. இந்நாடுகளுக்கு உண்மை நிலையைப் புரியவைக்க வேண்டும்.
அதேநேரம் யுத்தத்தின் பின்னரான மாற்றம் குறித்து சர்வதேச நாடுகள் புரிந்து கொள்வது அவசியம். எனினும் அத்தகைய புரிதல் சர்வதேசத்திடம் இருப்பது போலத் தெரியவில்லை. ஐ.நா. சபை பக்க சார்பாகச் செயற்படுமாயின் மனிதவுரிமைகள் சாசனத்தின் தனித்துவம் பாதிப்படையும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக