20 அக்டோபர் 2011

நாம் தமிழீழத்தை மறந்தாலும் அரசு ஞாபகப்படுத்துகிறது!

நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.நாம் அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய வினோ தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:
வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கோரிக்கை விடுத்தே வந்துள்ளோம். இதனை அரசு செவிமடுக்கவில்லை.நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் படையினரும் இன்னும் மறந்துவிடவில்லை.கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர் தலைவன் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் சட்டவிரோதக் கும்பலினால் தாக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரைத் தாக்கியவர்கள் “தமிழீழம் வேண்டுமா?சு என்று கேட்டே தாக்கி உள்ளனர். அப்படியானால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
கடந்த கால வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பாருங்கள். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது என்பதை மறந்து விடக்கூடாது.இது மட்டுமல்ல கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினோம்.எமது அமைதிப் போராட்டத்துக்கு சட்ட பூர்வமான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் பொலிஸார் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். வீதித்தடைகளை ஏற்படுத்தி மக்களை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்தனர்.அமைதி வழிப் போராட்டத்துக்கு தொடர்ந்தும் தடை விதித்தார்களேயானால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்றும் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.அதேவேளை இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் பாரதலக்ஸ்மனின் கொலையையும் அவர்கள் மீது போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பித்திருப்பார்கள் என்று கூறினார் வினோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக