கனடாவில் உள்ள தமிழர்களின் வாக்கு வங்கிக்காக சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவை விலையாகக் கொடுக்கவும் கனடா தயாராகி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கனடா வலியுறுத்தி வருகிறது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட், சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிலும் சிறிலங்கா விவகாரத்தை கனடா பிரச்சினையாக்கும் என்று கருதப்படுகிறது.
அத்துடன், கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜோன் பயார்ட், சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கடுமையான விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையிலேயே அங்குள்ள தமிழர்களின் வாக்குகளுக்காக சிறிலங்காவின் இராஜதந்திர உறவையும் இழக்க கனடா தயாராகி விட்டதாக சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவில் பெருமளவு தமிழர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளதால், அவர்களின் வாக்குகளைக் குறிவைத்தே கனேடிய அரசாங்கம் செயற்படுவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான கனடாவின் நடவடிக்கைகள் கொழும்பை பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதாகவும், கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக