31 அக்டோபர் 2011

சம்பந்தருடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு நூறு கனேடியன் டொலர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கலந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு அவருடன் அமர்ந்து உணவு உண்பதற்கு கனடா வாழ் புலம்பெயர் மக்கள் தலா 100 டொலர் நிதி செலுத்தவேண்டும் எனவும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் மக்கள் தலா 50 பவுண்ஸ் நிதியும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,அமெரிக்காவின் உயர் மட்ட அழைப்பினை அடுத்து அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பினரில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் கனடாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான அனுமதியினை கனேடிய உயர்ஸ்தானிகரகம் வழங்கவில்லை.
கனடா செல்லும் கூட்டமைப்பினருக்கான இராப் போசனத்திற்கான அழைப்பினை கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை என்ற பெயரிலான அமைப்பு விடுத்திருக்கின்றது. இந்த அமைப்பினால் கனடா வாழ் புலம்பெயர் மக்கள் 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், நிகழ்வில் கலந்து கொள்வோர் தலா நூறு டொலர்களை செலுத்த வேண்டும் என்றும் அழைப்பிதழலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேவேளை எதிர்வரும் ஆறாம் திகதி பிரித்தானியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள கூட்டமைப்பினருக்கான விருந்துபசார நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளவர்கள் தலா 50 பவுண்ஸ்களைச் செலுத்த வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னளர்.
அல்லல்படும் மக்களுக்கு கைகொடுப்போம் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் அங்கு சேர்க்கப்படும் நிதி எங்கு சென்று சேரும் என்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக கனடாவில் சேர்க்கப்பட்ட நிதி தொடர்பிலான கணக்கறிக்கை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அதேபோல கடந்த தேர்தல்களுக்காக தாம் சேகரித்து அனுப்பிய நிதி தொடர்பில் லண்டன் கூட்டமைப்புக் கிளையினர் லண்டனுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கேள்வி எழுப்பிய போது, அவ்வாறான நிதி தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்று சிறீதரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு கோடி ரூபா நிதி வழங்கப்பட்டிருந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அது தொடர்பிலான கணக்கறிக்கையும் கூட்டமைப்பினரிடம் இருப்பதாக தெரியவில்லை.
அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது இந்திய அரசினால் கூட்டமைப்பின் கட்சிச் செலவுக்காக எழுபத்தைந்து இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. ஆனாலும் சபைகளில் போட்டியிட்டவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரையிலேயே வழங்கப்பட்டிருந்தமை நோக்கத் தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்து ஒற்றுமையை வலுப்படுத்தத் தவறி வருகின்ற கூட்டமைப்பு, ஒரு தொண்டு நிறுவனத்தினைப் பதிவு செய்வதற்கான முயற்சியினை இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கின்ற கூட்டமைப்பு புலம் பெயர் மக்களின் பணத்தினைப் பெற்று என் செய்ய போகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக