தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26 லிருந்து அமெரிக்க இராஜாங்கத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பதாகத் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
பல மூத்த அதிகாரிகளை இதுவரை சந்தித்திருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், இனி வரும் நாட்களில் மேலும் சில முக்கிய செனட்டர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
இது வரை நடந்த சந்திப்புகளில், அமெரிக்க அதிகாரிகள், இலங்கையில் போருக்கு பின் , நல்லிணக்கம் என்று அரசு வெளி உலகுக்குக் கூறினாலும், நடக்கும் நடப்புகள் அதற்கு நேர்மாறாக இருப்பதைப் பற்றி விவாதித்தாகத் தெரிவித்தார்.
மேலும், அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்கா, இலங்கை அரசு மீது அரசியல் தீர்வு குறித்து அழுத்தங்களை தந்து கொண்டிருக்கிறது என்று கூறிய சுரேஷ் பிரேமசந்திரன், ஆனால் இலங்கை அரசு இதை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறதா என்பதுதான் சரியாகத் தெரியவில்லை என்றார்.
அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மற்ற சர்வதேச சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை என்றும் பீபீசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக