துமிந்த சில்வாவை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துமிந்தவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டமை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர், இது ஓர் மனிதாபிமான அடிப்படையில் நடைபெற்ற சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் துமிந்த தமது அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்ததாகவும்,ஆபத்து ஒன்றில் சிக்கிய போது அவரை பார்வையிடுவதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துமிந்தவை விடவும் பாரதவை தமக்கு நீண்ட காலமாக தெரியும் எனவும், பாரத ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாத பலர் துமிந்தவை சென்று பார்வையிடவில்லை எனவும், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சிலர் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு அமைச்சர்களோ ஏனைய முக்கியஸ்தர்களோ துமிந்தவை ஏன் பார்வையிடச் செல்லவில்லை என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கோதபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தனியார் பாதுகாப்புப் படையினரை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது என நீண்ட காலமாக தாம் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரத படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிழையான கருத்துக்களை மக்கள் முன்னிலையில் எடுத்துச் செல்ல சில தரப்பினர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் இருப்பதாக பாரத முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும், முறைப்பாடு செய்வதற்கு அவருக்கு போதியளவு சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் கோதபாய குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவுடன் தாம் உத்தியோகபூர்வமான உறவுகளை மட்டுமே பேணி வருவதாகவும் அதற்கு அப்பால் எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் சர்வதேச அழுத்தங்களை முறியடிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை எவரும் சரியாக மதிக்கவில்லை எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், கைதிகளை விடுதலை செய்தல், புலிச் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது எனவும் இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் கோத்தபாய தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக