25 அக்டோபர் 2011

அவுஸ்திரேலியா வரும் போர்க் குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு மனித உரிமை அமைப்புக்கள் வேண்டுகோள்!

ஒக்ரோபர் பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பங்கு கொள்ளும் உச்சி மாநாட்டில் சிறிலங்காவின் 'போர்க் குற்றவாளியான' அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு, அவுஸ்திரேலிய நாட்டின் பிரபலம் மிக்க சில மனித உரிமை வழக்கறிஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ராஜபக்ச அரசாங்கம் 'போர்க் குற்றங்கள்' மற்றும் 'மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்' போன்றவற்றை மேற்கொண்டுள்ளதாக, Deakin பல்கலைக்கழகத்தின் குடியுரிமை, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான டாமியன் கிங்ஸ்பெரி, 'சிறிலங்காவின் வகைகூறும்தன்மை : பொதுநலவாய அமைப்பில் பொதுவான நீதித்தன்மை' என்ற தலைப்பில் ஒக்ரோபர் 20 அன்று சிட்னியில் இடம்பெற்ற அனைத்துலக கருத்தரங்கிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"சிறிலங்காவில் 2009ல் 40,000 வரையிலான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் யுத்தத்தின் இறுதி வாரங்களில் 'மக்கள் செறிந்திருந்த பகுதிகளை நோக்கி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில்' கொல்லப்பட்டுள்ளனர். 2009 இல் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சிலவற்றை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தனர்" எனவும் பேராசிரியர் கிங்ஸ்பெரி தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்காண தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் காணாமற் போனமை தொடர்பாக நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாகவும், அனைத்துலக குற்றவியல் சட்டங்களின் பிரகாரம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகத் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்குத் தாக்கல் ஒன்றைச் செய்வதற்கு போதுமானதாகும் எனவும் கிங்ஸ்பெரி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக நீதி நடவடிக்கைகள் எடுக்கும் வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளதாக பேராசிரியர் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
சிட்னியில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களுடன் கிங்ஸ்பெரியும் இணைந்து கொண்டு, பேர்த்தில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கு ராஜபக்ச வரும்போது அவரிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
சிறிலங்காவிற்கான முன்னாள் அவுஸ்திரேலியாவின் உயர் ஆணையாளர் Bruce Haigh, கன்பராவிற்கான கத்தோலிக்க ஆயர் Pat Power, தேவாலய ஒருங்கிணைப்பாளரான வணக்கத்திற்குரிய ஜோன் பார், சமாதானம் மற்றும் முரண்பாடுகள் கற்கை மையத்தின் இயக்குனர் ஜேக் லின்ஜ், அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் அவுஸ்திரேலியாவிற்கான தலைவரும் NSW இன் முன்னாள் பிரதம வழக்கறிஞருமான ஜோன் டோவ்ட் ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள்.
வேறு நாடுகளிலிருந்து இக்கருத்தரங்கிற்கு சமூகம் தந்திருந்த சில பிரமுகர்களும், ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பில் தம்மையும் இணைத்துக் கொண்டனர். இவ்வாறு ஓங்கிக் குரல் கொடுத்தவர்களில் மலேசிய நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான டற்றோ ஜொகாறி அப்துல் மற்றும் எம். மனோகரன் ஆகியோர் உள்ளடங்குவர்.
அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்காவின் தற்போதைய ஆணையாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான திசார சமரசிங்கவை சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், ஏனெனில் இவர் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளியாகவுள்ளார் என்பதற்கான போதியளவு சாட்சியங்கள் உள்ளதாகவும் Haigh மற்றும் டோவ்ட் ஆகியோர் தெரிவித்தனர்.
சமரசிங்க தொடர்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பெறப்பட்ட சாட்சியங்களை அவுஸ்திரேலியாவிற்கான அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு, அவுஸ்திரேலிய காவற்துறையினரிடம் அனுப்பியுள்ளனர். அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரால் இக்கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
"சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கான போதியளவு சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான அழைப்புக்கள் அதிகரித்துள்ள போதிலும் சிறிலங்கா தொடர்ச்சியாக இவற்றை மறுத்துவருகின்றது" என சிட்னியில் இடம்பெற்ற இக்கருத்தரங்கின் தொடர்பாளர் Sam Pari தனது உரையில் குறிப்பிட்டார்.
"பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காத் தலைவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதானது, 2013ல் இடம்பெறவுள்ள இவ்வமைப்பின் உச்சி மாநாட்டை தமது நாட்டில் நடாத்துவதற்கான பரப்புரையை மேற்கொள்வதற்காகும். எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களுக்கான சரியான பதிலை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்காத வரை 2013ல் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டால் அதனைத் தான் புறக்கணிப்பதாக கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 2018ல் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுக்களை தனது நாட்டில் மேற்கொள்வதற்காக சிறிலங்கா, அவுஸ்திரேலியாவுடன் போட்டியிடுகின்றது" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக