11 அக்டோபர் 2011

புலிகள் பற்றிய அறிக்கை தவறென நிராகரித்தது அமெரிக்கா!

விடுதலைப் புலிகள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான 'றெட் மேர்க்குரி' இரசாயனத்தை அமெரிக்காவில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொடுத்த அறிக்கையை நம்பகமற்றது என்று அமெரிக்கா நிராகரித்தாக விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. 2006 ஜுலை 27ம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலிக்ககார, விடுதலைப் புலிகளிடம் இராசாயன அயுதங்கள் இருப்பது பற்றிய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றை கொழும்பில் இருந்த அமெரிக்க பதில் தூதுவரிடம் கையளித்தார்.
இந்த அறிக்கை சிறிலங்கா அரசுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்குத் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் தூதுவராக இருந்த ஜேம்ஸ் என்ட்விசில், அந்த ஆவணத்தை வொசிங்டனுக்கு அனுப்பி அதன் பதிலைப் பெற்றுத் தருவதாக கூறியிருந்தார்.
பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கப் பயன்படும் 'றெட்மேக்குரி' என்ற இரசாயனப்பொருளைக் கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக நம்பகமாக தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய ஒரு அரைப் புராணப் பொருளே றெட்மேர்க்குரி என்றும் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை சிறலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஆதாரம் காட்டியிருந்தது.
இது மரபுரீதியாகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிபொருளே என்றும், இதனை சிறிய அல்லது எளிதில் காவிச் செல்லக் கூடிய குண்டுகளுடன் இணைத்து பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2002ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் கொழும்பில் விஜேராம மாவத்தையில் சதொசவுக்கு அருகில் உள்ள ஆய்வு மற்றும் கருவிகள் முகவர் நிறுவனம் ஒன்றிடம் விடுதலைப் புலிகள் இந்த இரசாயனம் குறித்து விசாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேகாலப் பகுதியில் தமது அனைத்துலக ஆயுத முகவர்களின் மூலம் விடுதலைப் புலிகள் இந்த இரசாயனப் பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த இரசாயனப் பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது. ஹேர்குலிஸ் கெமிக்கல் கொம்பனி லிமிட்டெட் என்ற அந்த நிறுவனத்தின் முகவரியும் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் தமது சில போராளிகளை அனைத்துலக அளவில் நடைபெறும் அணுவாயுதப் போர்முறை பற்றிய கருதரங்குகளுக்கு அனுப்பி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
லண்டனில் ஹற்றன் என்ற இடத்தில் 2001 செப்ரெம்பர் 30 தொடக்கம் நவம்பர் 1 வரை நடைபெற்ற எஸ்.எம்.ஐ பாதுகாப்பு கருத்தரங்கிலும் புலிகளின் போராளிகள் பங்குபற்றியதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தரங்கில் அணுவாயுதப் போர்முறை பற்றியும் ஆராயப்பட்டதாகவும், போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் அணுவாயுதப் போர்முறையுடன் தொடர்புடைய நூல்களை குறிப்பிட்டதக்களவில் கொள்வனவு செய்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
கவனத்துக்குரிய உணர்வுபூர்வமான இந்தத் தகவல்களின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கு பொருத்தமான அனைத்துலக சமூகத்தை நாட வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பரிந்துரை செய்வதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஆவணத்தை 2006 ஜுலை 31ம் நாள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறியுள்ளது. இதையடுத்து 2006 ஓகஸ்ட் 15ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து, அப்போதைய இராஜாங்கச் செயலர் கொன்டலிசா ரைஸ் கொழும்புக்கு அனுப்பிய பதிலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
'றெட்மேர்க்குரி'யை பேரழிவு ஆயுதங்களாக வழக்கமான வெடிபொருள் அல்லது வேறு ஆயுதங்களில் இணைத்துப் பயன்படுத்த முடியாது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
றெட்மேர்க்குரியை பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று வொசிங்டனிடம் நம்பகமான தகவல் இல்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முகவரியில் எந்தவொரு இரசாயன நிறுவனமும் இருப்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் இதன் அடிப்படையில் அந்த அறிக்கை நம்பகமானது அல்ல என்றும் கொன்டலிசா ரைஸ் கூறியுள்ளார்.
இந்தக் காரணிகளின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நம்பகமானது அல்ல என்றும் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் சிறிலங்கா அரசுக்கு கூறுமாறும் அந்த தகவல் பரிமாற்றக் குறிப்பில் கொன்டலிசா ரைஸ் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக