17 அக்டோபர் 2011

புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியம் காணப்படுவதாக பி.ரி.ஐ.தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நெதர்லாந்து அதிகாரிகள் மற்றும் யூரோபோல் ஆகிய இருதரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போது தமிழீழம் கோரி 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாக அரசாங்கம் நம்பியிருந்தது.
ஆனால் நெதர்லாந்து நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் ஐரோப்பாவில் தற்போதும் தமிழீழக் கோரிக்கை வலுவாகவிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் சட்டவிரோத நிதி சேகரிப்பு, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பயங்கரவாத நிலைகளும் அதன் போக்கும் எனும் தலைப்பில் யூரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வமைப்புக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து நெதர்லாந்து தமிழர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளின் போது ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகமாகவுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கணினியில் இருந்து நிதி தொடர்பிலான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அரச வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தமிழீழத்தை உருவாக்க வேண்டும் எனும் இலட்சியத்தைப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போதும் கொண்டிருப்பதாகவும் இவ்வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னரும் ஐரோப்பாவில் இடம்பெற்று வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைகின்றனரா என்ற ஐயத்தையே நெதர்லாந்து நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ரொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழம் எனும் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ளனர் என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக