06 அக்டோபர் 2011

அரசாங்கம் விடுதலை செய்வதாக கூறிய போராளிகளில் குறைந்தளவினர் மட்டுமே விடுதலை!

அரசாங்கத்தால் கடந்த மாதம் 30ஆம் திகதி விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆயிரத்து 800 போராளிகளில் 755 பேர் கடந்த 03ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சி பெற்ற 755 விடுதலைப் புலிகளின் போராளிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராளிகள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுப் பாடசாலையில் இயங்கி வந்த புனர்வாழ்வு நிலையத்தில் வைத்துப் படைத்தரப்பினரால் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் விசேட அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அன்றையதினம் தயார்ப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தினால் ஜனாதிபதியினால் அடையாளமாக விடுவிக்கப்பட்ட 30 போராளிகளும்கூட வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களுக்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு இப்போராளிகள் அனைவரும் கடந்த திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து விடுதலை செய்யப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். ஆயினும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயப் புனர்வாழ்வு நிலையத்திற்குக் கடந்த 03ஆம் திகதி காலை அழைத்துச் செல்லப்பட்ட 755 போராளிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் ஏற்கெனவே அறிவித்தவாறு எவரும் விடுதலை செய்யப்படவில்லை. மிகுதியாக விடுதலை செய்யப்படவுள்ளவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே நேற்று எவரும் விடுதலை செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக