04 மே 2011

ரத்னசிறியை பார்த்தாவது தமிழ் பச்சோந்திகள் திருந்த வேண்டும்.

சிங்கள மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த ரட்ணசிறி விக்ரமநாயக்கர்போல் எம்மில் உள்ள பச்சோந்தி தமிழ் அரசியல்வாதிகளும் தமது தமிழ் உணர்வுகளை வெளிக்காட்டவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்றம் 35வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய மென்பந்து கிறிக்கட்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
புதுக்குடியிருப்பு கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தனித்துவமிக்க கிராமமாக செயற்படுவது எமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகின்றது. இந்தக்கிராமத்தில் ஒரு விளையாட்டுகழகம், ஒரு கலைக்கழகம், ஒரு ஆலய நிர்வாகம் இருந்து தனித்தவமாக அனைவரையும் அரவணைத்து செயற்படுவது ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக இந்தக் கிராமம் உள்ளது.
அத்தோடு இந்த புதுக்குடியிருப்பு மண்ணில் கடந்த 35 வருடமாக இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடாத்திவரும் கதிரவன் கலைக்கழகம் பாராட்டப்படவேண்டியது.எவன் ஒருவன் ஒழுக்கத்துடன் கல்வியை சிறந்த முறையில் பெறுகின்றானோ அவன் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒழுக்கத்துடன் வாழ்வான்.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்க தரப்புக்கு தலைமை தாங்கியிருந்த ரட்ணசிறி விக்ரமநாயக்க என்கின்ற சிரேஸ்ட அனுபவம் வாய்ந்த அதிகாரி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நாவின் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்ததாகக்கூறி அந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன். அவர் ஒரு சிங்கள அரசியல்வாதியாக உள்ளார். அவர் தனது இனத்துக்கும், நாட்டுக்கும் பிரச்சினைவரும் போது அங்கு அவர் தனது இன, மொழியுணர்வை வெளிப்படுத்துகின்றார். உண்மையில் நான் அதனை பாராட்டுகின்றேன். இதனை சிங்கள மக்கள் ஒரு கவரிமான் போன்று பார்க்கின்றனர்.
இவ்வாறு சிங்கள அரசியல் தலைமைகள் தமது இன, மொழியுணர்வை வெளிப்படுத்தும் போது எம்மில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் பச்சோந்திகளாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இவர்கள் ரட்ணசிறி விக்ரம நாயக்கவிடம் இருந்து பாடம்கற்றுக் கொள்ளவேண்டும்.எந்த சமூகத்தை சேர்ந்தாலும் நாங்கள் சமூகப்பற்று மொழிப்பற்று இனப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். தமிழ் மக்களாகிய நாம் அனைத்து முரண்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டு தமிழன் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே நாங்கள் விடுதலையை பெறமுடியும்,எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழும்.
இன்று பச்சோந்தியாக உள்ள எமது தமிழ் அரசியல்வாதி நண்பர்கள் ரட்ணசிறி விக்ரமநாயக்காவை பார்த்து திருந்தவேண்டும். தமிழ் உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இன்று இலங்கையில் உள்ள சிறைச்சாலையில் ஒரு தமிழ் அரசியல்கைதியொருவர் தன்மீது எதுவித விசாரணையும் இன்றி தடுத்துவைத்துள்ளதை கண்டித்தும் தன் விடுதலைக்கு நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றார். அவர் ஐ.நா.வந்து விசாரிக்கவேண்டும் என்று அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அல்லது ஐ.நா.அறிக்கையினை ஆதரித்து அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் தனது விடுதலைக்காகவே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்துவருகின்றார்.
அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையில், அவருக்கு நீதி கிடைக்காத நிலையிலேயே இன்று தமிழ் இனம் உள்ளது. இதுவே தமிழர்களுக்கும் – சிங்களவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகவுள்ளது. என்றார்.

1 கருத்து:

  1. பெயரில்லா4 மே, 2011 அன்று 5:27 PM

    ஐயா பிறகு இந்த பச்சோநதிக் கூட்டத்தின் சொகுசு வாழ்விற்கு யார் காலை நக்கப் போகச் சொல்கின்றீர்கள். இவர்கள் தமது இனத்தை விற்றுண்டு குபேர வாழ்வு வாழ பச்சோந்திகளாகவே இருக்க வேண்டும். தமிழரின் இழிநிலைக்கு இவர்கள் அல்லவோ காரணம்.

    பதிலளிநீக்கு