28 மே 2011

ஆனை விழுந்தான் பகுதியில் மனித மண்டையோடு மீட்பு!

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் ஆனை விழுந்தான் 10ஆம் குறுக்குத் தெருவில் மனித மண்டையோடொன்று நேற்று மு.ப. 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மண்டையோட்டுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் போராளிகளுக்கு வழங்கப்படும் இரண்டு இலக்கத் தகடுகளும் காணப்பட்டன.
வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் 10ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அணைக்கு அண்மித்த பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் போது அணையுடன் அமைந்திருந்த கைவிடப்பட்ட காவலரண் முன்பாக மேற்குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பொ. சிவகுமார், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன், அக்கராயன் காவற்துறையினர் ஆகியோரின் முன்னிலையிலேயே விசாரணை இடம்பெற்றது.
மனித மண்டையோட்டுடன் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளினால் போராளிகளுக்கு வழங்கப்படும் 'த.வி.பு ஐ 7176' என்ற தகடு இரண்டும் காணப்பட்டது. அத்துடன் ரவைக்கூடு தாங்கி (ஜக்கற்) மீட்கப்பட்டது.
அதிலிருந்து வெடிக்காத நிலையில் இரண்டு கைக்குண்டுகளும், மகசின் இரண்டும், துப்பாக்கிரவைகள் சில, சிறிய ஒயில் குப்பியொன்றும், பற்தூரிகை, ரோச், பற்றரி சார்ஜர் என்பனவும் மீட்கப்பட்டன.
இடுப்பின் கீழ் பகுதிகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்தன. பின்னர் இராணுவத்தினரால் அது இழுத்து எடுக்கப்பட்டது. இதன்போது ஜீன்ஸிலிருந்து மேலும் சில எலும்புகள் மீட்கப்பட்டன. அத்துடன் இவற்றுக்கருகில் வீழ்ந்து வெடித்த நிலையில் புதையுண்டிருந்த ஆர்.பி.ஜி.யின் எஞ்சிய பாகங்களும் மீட்கப்பட்டன. யுத்தத்தின் போது ஆர்.பி.ஜி. தாக்கு தலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினருடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரசேதத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக